நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திப்பது என முடிவெடுத்துச் செயல்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக ஜூன் 23ம் தேதி பாட்னாவில் எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ‘I-N-D-I-A’ (Indian National Developmental Inclusive Alliance) என பெயர்வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ’இந்தியா’ என்ற பெயரை கேட்டாலே பாஜக தலைவர்கள் அலறி வருகின்றனர். முதன் முறையாக அசாம் பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா, தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள INDIA என்ற பயோவை 'பாரத்' என்று மாற்றி "ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு இந்தியா என்று பெயரிட்டனர். காலனித்துவ மரபுகளில் இருந்து விடுபட நாம் பாடுபட வேண்டும். நமது முன்னோர்கள் பாரதத்திற்காக போராடினார்கள், நாம் தொடர்ந்து பாரதத்திற்காக உழைப்போம். இது 'பாரதம்'. மோடி பாரதத்திற்கான பிரதமர்" என்று கூறினார்.
அதன் பின்னர் மோடி தீவிரவாத இயக்கங்களின் பெயரில் கூட இந்தியா இருக்கிறது என பயத்தில் கூறியிருந்தார். நாடாளுமன்றத்தில் பேசிய பாஜக மாநிலங்களவை உறுப்பினர் நரேஷ் பன்சால் "இந்தியா என்பது பிரிட்டிஷ் காலனியாத்த ஆட்சியாளர்களால் வைக்கப்பட்ட பெயர். நாட்டின் உண்மையான பழமையான பெயர் பாரத் என்பதுதான். இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்யவேண்டும்"என்று கூறியுள்ளார். இதன் மூலம் இந்தியா என்ற பெயரைக்கண்டு பாஜகவினர் அஞ்சிவருவது வெளிப்படையாகவே தெரிந்தது.
இந்த நிலையில், உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. இதனைக் குறிப்பிட்டு, பாஜகவின் அதிகாரபூர்வ X சமூக வலைதள பக்கத்தில் "இந்தியா வெற்றி பெரும் , உங்கள் மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்" என பதிவிடப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ X சமூக வலைதள பக்கத்தில், "உண்மை தான். இந்தியா வெல்லும்" என பதிவிடப்பட்டுள்ளது. இந்த சமூகவலைத்தள பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பாஜகவுக்கு இந்தியா என்ற பெயரே கசந்து வரும் நிலையில், அவர்களின் இந்த பதிவும், அதற்கு காங்கிரஸ் கட்சியின் பதிலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.