கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசியபோது, "கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை GST இழப்பீட்டு தொகையாக ரூ.9,603 கோடியை ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாடு பெற்றுள்ளது. ஆனால் நடப்பாண்டில் ரூ.3,533 கோடி வரை மட்டுமே பெற்றுள்ளோம். ஒன்றிய அரசுக்கு வரியாக தமிழ்நாடு செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் நமக்கு 29 பைசாதான் திரும்பக் கிடைக்கிறது.
பா.ஜ.க. ஆளும் மாநிலம் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கு 2.73 ரூபாய் திரும்பக் கிடைக்கிறது. 2014 முதல் 2022 வரை ஒன்றிய அரசின் நேரடி வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு ரூ.5.16 லட்சம் கோடி. ஆனால் வரிப் பகிர்வாக நமக்குக் கிடைத்தது வெறும் ரூ.2.08 லட்சம் கோடி.அதே சமயத்தில் உ.பி.யின் பங்களிப்பு ரூ.2.24 லட்சம் கோடி. ஆனால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது ரூ.9.04 லட்சம் கோடி. உத்தர பிரதேசம், பீகாருக்கு 200% பேரிடர் நிதி வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டிற்கு 64% மட்டுமே வழங்கப்படுகிறது. நிதிப்பகிர்வில் ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது" என்று கூறினார்.
இந்த நிலையில் தற்போது ஓன்றிய அரசுக்கு நிதியளவில் பெரும் பங்களிப்பு செய்தும் ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டுக்கு குறைவான அளவே ஒதுக்கப்படுகிறது என Times of India நாளிதழ் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், 2015-2022 வரையிலுமான காலகட்டத்தில் தமிழ்நாட்டின் நேரடி வரி பங்களிப்பு 5 லட்சம் கோடி ரூபாய். ஆனால், திரும்பக் கிடைத்தது 2 லட்சம் கோடி ரூபாய்.
அதே ஆண்டில் உத்தரப்பிரதேசத்தின் நேரடி வரி பங்களிப்பு பங்களிப்பு 2.2 லட்சம் கோடி ரூபாய். திரும்பக் கிடைத்தது 10 லட்சம் கோடி ரூபாய். ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 29 பைசா மட்டும்தான் திரும்பக் கிடைக்கிறது. அதே நேரம் உத்தரப்பிரதேசம் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 3 ரூபாய் திரும்பக் கிடைக்கிறது. பிகார் 7 ரூபாய் திரும்பப் பெறுகிறது.
நாட்டின் 6.1 சதவிகித மக்கள்தொகை இருக்கும் தமிழ்நாட்டுக்கு மொத்த நிதியிலிருந்து 4% மட்டுமே ஒதுக்கப்படுகிறது. ஒரு குடிசை மாற்று வாரிய வீடு கட்ட ஒன்றிய அரசு 1.5 லட்சம் ரூபாயும் மாநில அரசு 13.5 லட்ச ரூபாயும் கொடுக்கிறது. ஆனால் பயனாளிகளை தீர்மானிக்கும் அதிகாரம் தமிழ்நாட்டுக்குக் கிடையாது.சுகாதாரத்துக்கான போஷான் அபியான், மீன்வளத்துறைக்கான பிரதான் மந்திரி மஸ்ய சம்படா போன்ற திட்டங்களில் மாநில அரசுக்கான பங்கு பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளது.