மணிப்பூரில் மெய்தெய் - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் மெய்தெய் சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வன்முறையில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூர் வன்முறை பக்கத்தில் மாநிலத்துக்கு பரவும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் வடகிழக்கு மாநிலங்களில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் அருகில் உள்ள மிசோரம் மாநிலத்தில், இருந்து இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெய்தெய் சமூக மக்கள் வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும், மிசோரமில் வசிக்கும் மெய்தி மக்கள் மிசோரமில் இருந்து வெளியேற வேண்டும், அல்லது அவர்களுக்கு எதிராக ஏதேனும் வன்முறை நடந்தால் அதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று PAMRA என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் மிசோரம் மாநிலத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரச்சாரத்துக்காக மிசோரம் வரும் பிரதமர் மோடியுடன் மேடையை பகிர்ந்து கொள்ள மாட்டேன் என அம்மாநில முதல்வர் ஜோரம்தங்கா அறிவித்துள்ளது. மிசோரம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மிசோ தேசிய முன்னணி ஆட்சியில் உள்ள நிலையில், அது தேசிய அளவில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.
இதனிடையே தேர்தல் குறித்து பேசிய மிசோரம் முதலமைச்சர் ஜோரம்தங்கா, "மிசோரம் மாநில மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள். மணிப்பூரில் தேவாலயங்கள் எரித்தது இங்குள்ள மக்களுக்கு நன்கு தெரியும். இத்தகைய சூழலில் பாஜகவுடன் பரிவு காட்டுவது எங்கள் கட்சிக்கு பின்னடைவாக அமையலாம். அதனால் பிரதமர் மோடி தனியாக பரப்புரை மேற்கொள்வதும், நான் தனியாக பரப்புரை மேற்கொள்வதும் தான் சரியாக இருக்கும். அவருடன் நான் மேடையை பகிர்ந்துகொள்ள மாட்டேன்" என்று கூறியுள்ளார். முன்னதாக மிசோரத்தில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டால் பாஜக உடனான கூட்டணியில் நீடிக்க மாட்டோம் என ஜோரம்தங்காஅறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.