கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது.இந்த தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது.
அதனைத் தொடர்ந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியோடு கூட்டணி என பாஜக தலைவர்கள் தன்னிச்சையாக அறிவித்தனர். முதலில் இதனை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும் தேவகவுடாவின் மகனுமான குமாரசாமி மறுத்தாலும் பின்னர் அதனை ஒப்புக்கொண்டார்.
இதன் காரணமாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாநில துணைதலைவர் சையத் சபிவுல்லா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் காதர் ஷாஹீத்தும் அக்கட்சியில் இருந்து விளங்குவதாக அறிவித்தார். இப்படி முக்கிய நிர்வாகிகள் அந்த கட்சியில் இருந்து விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து மக்களவை தேர்தலில் பாஜகவை ஆதரிக்க மாட்டோம். 'INDIA' கூட்டணிக்குதான் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி ஆதரவு தெரிவிக்கும். எங்களுடையது தான் உண்மையான மதச்சார்பற்ற ஜனதா தளம் என அக்கட்சியின் கர்நாடக மாநில தலைவர் இப்ராஹிம் அறிவித்தார். இவரின் இந்த கருத்து கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாநிலத் தலைவர் இப்ராஹிமை கட்சியில் இருந்து நீக்குவதாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா அறிவித்துள்ளார். மேலும் கர்நாடக மாநில மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவராக தனது மகன் குமாரசாமியை நியமிப்பதாகவும் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் கேரள மற்றும் மகாராஷ்டிர மாநில நிர்வாகிகளும் பாஜக கூட்டணியை ஏற்க மறுத்த நிலையில், தற்போது அக்கட்சியின் கர்நாடக மாநில தலைவர் இப்ராஹிம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது கட்சியில் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது.
நாங்கள்தான் உண்மையான மதச்சார்பற்ற ஜனதா தளம் என இப்ராஹிம் கூறியுள்ள நிலையில், அவர்களும் கட்சிக்கு உரிமை கோருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. ஏற்கனவே பாஜக கூட்டணியில் சேரும் கட்சிகள் உடைபடுவதும், சிதைவதும் நடந்து வந்த நிலையில் அந்த பட்டியலில் தற்போது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இணைந்துள்ளது.