ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் 25-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் நிலையில், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது. இதனால் பா.ஜ.க அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
இதையடுத்து, 7 எம்.பிகள் உள்ளடங்கிய 41 பேர் கொண்ட முதல் கட்டப்பட்டியலை பா.ஜ.க வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் கட்சிக்குள் உட்கட்சி மோதலை உருவாக்கியுள்ளது. அதேபோல் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் ஆதரவாளர்களின் பெயர்கள் இடம் பெறாததால் அவர்களும் போர்கொடி தூக்கியுள்ளனர்.
இந்நிலையில் ஜோத்வாரா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க எம்பி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத முன்னாள் அமைச்சர் ராஜ்பால் சிங்கின் ஆதரவாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் அவருக்குக் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கட்சி தொண்டர்களைச் சமாதானப்படுத்த நினைத்து அவர்களுக்கு இனிப்பு வழங்க முயன்றார். ஆனால், தொண்டர்கள் இனிப்பு வாங்க மறுத்து அவருக்கு எதிராக தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவர் உடனே தனது காரில் ஏறி அங்கிருந்து சென்றார்.
இப்படி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொண்டர்கள் பலரும் பா.ஜ.க தலைமைக்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்கட்ட பட்டியல் வெளியிட்டதற்கே இப்படி மோதல் வெடித்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட பட்டியல் வெளியிட்டால் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் பா.ஜ.க தலைமை விழிபிதுங்கிக் கிடக்கிறது.