வரும் 2024 மக்களவைத் தேர்தலின் தோல்வி பயத்தால், அவசர அவசரமாக மகளிர் 33% இட ஒதுக்கீட்டை ஒன்றிய பி.ஜே.பி. அரசு கொண்டு வருகிறது. மகளிர் ஏமாந்துவிடாமல் 2024 மக்களவைத் தேர்தலில் மகளிர் பி.ஜே.பி. கூட்டணியைத் தோற்கடிக்க முன்வரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
"கடந்த 13 ஆண்டுகளுக்குமேல், நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளில் மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா - புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் கூடிய முதல் கூட்டத்தில், மக்களவையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்பது முழு மகிழ்ச்சிக்கும், உண்மையான வரவேற்புக்குரியதாகவும் அமையவில்லை என்பதே அப்பட்டமான உண்மையாகும்.
காரணம், இது மகளிருக்கு உடனடியாகப் பயன்படக் கூடியதாக இல்லை. இதனுள் பொதிந்துள்ள ஆபத்து. அது வருகின்ற பொதுத் தேர்தலில் நடைமுறைக்கு வராது - வர முடியாது என்று அம்மசோதாவிலேயே (15 year sunset clause என்ற ஒன்றுடன்) கூறப்பட்டுள்ளது! நிறுத்தி வைக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (சென்சஸ்) முடிந்து, அதன்பிறகும் தொகுதி மறுவரையறை (Delimitation) முடிந்து, அதன் பிறகே அது நடைமுறைக்கு வர முடியும் என்பது மகளிருக்கு அது ஒரு கானல் நீர் வேட்டைபோல ஆக்கப்பட்டுள்ளது!
இப்போது இப்படி அவசரமாக 5 நாள் கூட்டம்; அதில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்வரை ரகசியமாக வைத்திருந்து, இந்தச் சூழ்ச்சிப் பொறிகளை வைத்து, வரும் 2024 இல் அதை ஆவலோடு எதிர்பார்த்த மகளிருக்குக் கிடைக்கவிடாமல், 2029 அய் எதிர்நோக்கும் வண்ணம் ஏமாற்று வேலை படமெடுத்தாடுகிறது!உண்மையில் இது மகளிர் உரிமையைப் பாதுகாக்கவோ, உரிய பிரதிநிதித்துவம் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிர் பெறவோ கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படவில்லை!
மகளிர் 33% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வராது - மசோதாவே கூறுகிறது! மாறாக, வரும் 2024 இல் தோல்வி அச்சத்தின் உச்சத்தில் இருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சி மீண்டும் சிம்மாசனம் பெற - இதுவாவது - மகளிரின் வாக்குகளாவது கைகொடுக்காதா என்பதற்காகவே இந்தப் புது வியூகம் - வித்தை எல்லாம்!
மகளிரைக் காப்பாற்ற அல்ல; அவர்களுக்கு உரிமை தர அல்ல; தங்களது கட்சிக்குத் தோல்வி ஏற்படக்கூடும் என்ற பயத்தின் காரணமாகவே இப்படி ஒரு ‘வானவில்’ காட்சி!
இதை நமது தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களும் இதனை சுட்டிக்காட்டியுள்ளனர் - மிகப் பொருத்தமாக. அதுமட்டுமா?
சமூகநீதி இணைந்த பாலியல் நீதியே முக்கியம்!
இவ்வளவு காலம் அது தடைபட்டு - நிறைவேறாமல் வைக்கப்பட்டிருந்ததற்கு முக்கிய காரணமே, அது வெறும் பாலியல் நீதியாக மட்டும் அமையாமல், சமூகநீதி இணைந்த பாலியல் நீதியாகவும் அமையவேண்டும்(Gender Justice Combined with Social Justice) என்பதால்தானே!
மக்கள் சதவிகிதத்தில் மிகப் பெரும்பாலோரான மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகப் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் (Adequate representation) நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் கிடைக்க அம்மசோதாவினை உரிய காலத்தில் அமலாக்காததே காரணம் என்பதை நாடும், பிற்படுத்தப்பட்ட சமூக மகளிரும் மறப்பார்களா? தங்கள் உரிமைகளைத் துறப்பார்களா?
எஸ்.சி., எஸ்.டி., தொகுதிகள் வாய்ப்பு அவர்களுக்கு ஏற்கெனவே உள்ளதால், அதில் இவர்கள் மாற்றம் செய்ய முடியாது; ஆனால், ஓ.பி.சி., எம்.பி.சி., ஆகிய சமூகப் பெண்களின் பிரதிநிதித்துவம் கிட்டவேண்டாமா? அதற்கு இம்மசோதாவில் இடம் இல்லையே!
தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் எம்.பி.,க்களின் எண்ணிக்கை குறையும் ஆபத்து!
அதுமட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ். மற்றொரு உள்நோக்கத்தையும் தனது திட்டமாகக் கொண்டு, வடபுல ஹிந்தி மாநிலங்களின் தொகுதிகளை அதிகரித்து, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் குடும்பக் கட்டுப்பாடு கொள்கையை சிறப்பாக அமல்படுத்தியதால், அதன் தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, வடக்குத் தெற்கு பேத இடைவெளியை அதிகப்படுத்திட ஒரு பெரும் சூழ்ச்சியும் உள்ளே இத்திட்டத்திற்குப் பின் புதைந்துள்ளது (Delimitation -க்குப் பின்) - அதை நன்கு புரிந்தே நமது தமிழ்நாட்டின் முதலமைச்சர் தமிழ்நாட்டிற்குரிய தொகுதிகள் ஒருபோதும் குறைக்கப்பட அனுமதிக்க முடியாது என்று வருமுன்னரே தடுப்பு முறையை ஏற்படுத்தத் தக்கபடி எச்சரித்துள்ளார்! இதைக் கண்டு எந்த மகளிரும் ஏமாறமாட்டார்கள் என்பது உறுதி!
2024 இல் மக்கள் தீர்ப்பு அளிப்பார்கள்! :
‘திராவிட மாடல்’ சொன்னதை உடன் செய்துகாட்டும் - ‘குஜராத் மாடலோ’ நீரில் எழுதி, இப்படி வித்தை காட்டுகிறது! இதை மக்கள் புரிந்து 2024 இல் பதிலடி கொடுத்துப் பாடம் புகட்டுவர்! ஒரு திரைப்படத்தில் வரும் வசனம்போல, ‘‘வரும், ஆனால், வராது’’ என்பதுபோல கேலிக் கூத்து இப்போது நடைபெற்றுள்ளது!
பெண்களின் வாக்குகளை வாங்கித்தான் ஆட்சிக்கு வருவதால், அவர்களைக் கடவுளாக்குவதுபோல ‘நாரி சக்தி’ அப்படியெல்லாம் மசோதாவிற்குப் பெயரிட்டு, நடைமுறையில் அவர்களுக்கு 2024 இல் கிடைப்பது மோடி ஆட்சியால் வெறும் அல்வாதான்! மிஞ்சியது ஏமாற்றம்தான்! வெறும் கானல் நீர் வேட்டைதான்! எத்தனை காலம்தான் இப்படி ஏமாற்றம் தொடரும் என்பதால், 2024 இல் மகளிர் நல்ல தீர்ப்பளிப்பார்கள் என்பது நிச்சயம்!