மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அம்மாநிலத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆளுங்கட்சியான பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மத்திய பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி புந்தேல்கண்டில் உள்ள சாகர் மாவட்டத்தில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் தொண்டர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கார்கே, பாஜவை விமர்சித்ததோடு சில வாக்குறுதிகளையும் கொடுத்தார். அதில் மகளிருக்கு மாதந்தோறும் தொகை, இலவச மின்சாரம், விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட தமிழ்நாட்டின் திராவிட மாடல்களின் சிறப்பு அம்சம் இடம்பெற்றுள்ளது.
வாக்குறுதிகள் என்னென்ன ? :
* தகுதியுடைய அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,500 வழங்கப்படும்
* விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்
* சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்
* கேஸ் சிலிண்டர் ரூ.500 விற்பனை செய்யப்படும்
* 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்
* அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.
* தலித்துகள் கடவுளாக வணங்கும் சாந்த் ரவிதாஸ் பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்
- உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
தலித்துகள் கடவுளாக வணங்கும் சாந்த் ரவிதாஸ் கோயிலை, டெல்லியில் கடந்த 2019-ம் ஆண்டு பாஜக இடித்தனர். இதற்காக போராட்டங்களும் நடத்தப்பட்டது. இருப்பினும் அதனை பாஜக காதில் வாங்கிகொள்ளவில்லை. ஆனால் இப்போது அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், பிரதமர் மோடி சமீபத்தில் சாகர் மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்பில் சாந்த் ரவிதாஸின் நினைவு மற்றும் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த சூழலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாந்த் ரவிதாஸ் பெயரில் அதே சாகர் மாவட்டத்தில் பல்கலைக்கழகம் உருவாக்குவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.