இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனாக இருந்து வந்தவர் சந்தீப் சிங். அதில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த இவர், கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஹரியானா சட்டமன்ற தேரத்லில் பெஹோவா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவர் அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
இந்த நிலையில் இவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இளநிலை பெண் தடகள பயிற்சியாளர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அதாவது கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம், அந்த பெண் பயிற்சியாளர் ஒருவர் இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக இருந்த சந்தீப் சிங் மீது பாலியல் புகார் அளித்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரில், "சந்தீப் சிங் என்னை முதலில் உடற்பயிற்சி நிலையத்தில் சந்தித்தார். பின்னர் இன்ஸ்டாகிராம் மூலம் என்னிடம் பேசினார். தொடர்ந்து அவரை சந்திக்கவும் வற்புறுத்தினார். அதற்கு நான் பெரிதாக பதில் அளிக்கவில்லை.
இதனால் எனது தேசிய விளையாட்டுப் போட்டி தொடர்பான சான்றிதழ் அவரிடம் உள்ளது என்றும், எனவே அவரை வந்து சந்திக்க வேண்டும் என்றும் அடிக்கடி தொந்தரவு செய்தார். இதனால் அவரை சந்திக்க சென்றபோது என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்" என்று குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையான நிலையில், இதற்காக பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.
தொடர்ந்து இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையான நிலையில், தன் மீதான புகார்கள் முற்றிலும் ஆதாரமில்லாதவை என்று சந்தீப் சிங் தெரிவித்தார். தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் சந்தீப் சிங், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து சந்தீப் சிங் மீதான புகார்களை விசாரிக்க ஹரியானா அரசு மூவர் கொண்ட சிறப்புப் புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த விவகாரம் குறித்து அவர் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று குற்றசாட்டுகள் உள்ள நிலையில், இதுவரை அவர் மீது குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் இந்த விவகாரம் குறித்து அவர் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று குற்றசாட்டுகள் உள்ளது.
இந்த நிலையில் சந்தீப் சிங் மீது புகார் அளித்த இளநிலை பெண் தடகள பயிற்சியாளரை விளையாட்டுத்துறை அமைச்சகம் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இடைநீக்கம் குறித்து அந்த பயிற்சியாளருக்கு எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் பயிற்சியாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் இந்த நிகழ்வுக்காக ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் பெயரை பயன்படுத்தக்கூடாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடைநீக்க உத்தரவில் ஹரியானா விளையாட்டுத்துறை இயக்குநர் யஷேந்திர சிங் கையெழுத்திட்டுள்ளதாக குறிப்பிட்ட பெண் பயிற்சியாளர், இதனால் தமது முன்னேற்றம் பாதிக்கப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.