நாடாளுமன்றத்தில் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி பேசியது பலரை வியக்க வைத்தது; இன்னும் சிலரை வியர்க்க வைத்தது! மற்றும் பலரை பதற வைத்துள்ளது! காங்கிரஸ் இல்லாத இந்தியாவைக்காண கனவு கண்டோரை கதற வைத்து விட்டது! நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது ஆகஸ்ட் 9 ந் தேதி 12 மணிக்கு ராகுல்காந்தி பேசுவார் – என்ற செய்தி பரபரப்பானது மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கும் ஆளானது! மாநில ஊடகங்கள் மட்டுமின்றி அகில இந்திய ஊடகங்களின் ‘Breaking News’ (பிரேக்கிங் நியூஸ்) ஆனது.
ராகுல்காந்தி இந்திய நாடாளுமன்றத்தில் எத்தனையோ முறை பேசியுள்ளார்! அப்போதெல்லாம் உருவாகாத எதிர்பார்ப்பு இப்போது எங்கும் உருவாகியது! பிரதமர் மோடியால் ‘பப்பு’ என ஏளனமாகக் கருதப்பட்டவர் ‘பாபு’ வாக உயர்ந்து நின்றார்! கேலி பேசியவர்கள் கிலி கொண்டனர். அவர் பேசத் தொடங்கினார்; இந்தியா முழுதும், மாநில மொழி ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும் அவரது பேச்சு ஒளிபரப்பானது! ‘ஊர்க்குருவி’ என நினைத்து உதாசீனப்படுத்த நினைத்தோர் எண்ணங்களைத் தவிடு பொடியாக்கி அந்த வல்லூறு உயரப் பறந்து வானமெங்கும் வட்டமடித்தது!
அவர் பேசத் தொடங்கியதுமே எதிர்ப்புக் குரல்கள்! பேச்சுக்குத் தடங்கல் ஏற்படுத்தினால் தடுமாறி விடுவார் என்ற எண்ணத்தில் இடர்களை உருவாக்க எண்ணினர்! எதிரணியினர் போட்ட தடைக்கற்களை தவிடு பொடியாக்கி தணலாய் கொதித்தார்! தங்கு தடையற்ற பேச்சு; அங்கே வாய் பேசவில்லை; ராகுலே கூறியபடி, அங்கு இதயம் பேசியது! இந்திய நாட்டுக்காக தியாகங்கள் பல செய்த குடும்பத்தின் தியாக ரத்தம் சூடேறி கொதித்துப் பேசியது!
அந்த அவையிலே அவரது கொள்ளுத் தாத்தா நேரு உரையாற்றியுள்ளார்! அவர், சபையில் ஆளும் கட்சியின் பிரதமராக நுழைந்து, மறையும் வரை பிரதமராக இருந்து மறைந்தவர்.
“நேருவின் பேச்சிலே குறுக்கிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோபதாபத்துடன், எரிச்சல் ஏளனத்துடன் காரசாரத்துடன் பல பேசுவார்கள். துளியும் பதறாமல் ஒரு ஐம்பது ஆண்டுகால வரலாற்றை உருவாக்கிய அந்தப் பெருந்தலைவர்; ஜனநாயகத்தில் இது தவிர்க்க முடியாதது என்று மட்டுமல்ல; இது தேவைப்படுவது, வரவேற்கப்பட வேண்டியது என்ற பண்புணர்வோடு பதில் அளிப்பார்.” – என நாடாளுமன்றத்தில் அவரோடு எதிரும் புதிருமாக இருந்து அரசியல் நடத்திய நமது அறிவாசான் அண்ணாவால்போற்றப்பட்டவர் நேரு!
‘‘நாம் அனைவரும் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, சம உரிமைகள், சலுகைகள் மற்றும் கடமைகள் கொண்ட இந்தியாவின் குழந்தைகள். வகுப்பு வாதத்தையோ அல்லது குறுகிய மனப்பான்மையையோ நாம் ஊக்குவிக்க முடியாது. ஏனென்றால் சிந்தனையிலும், செயலிலும் குறுகிய மனப்பான்மை மேலோங்கி விட்டால் எந்த தேசமும் பெரியதாக இருக்க முடியாது.’’– என ராகுலின் கொள்ளுத் தாத்தா, இந்திய நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது நள்ளிரவில் நாடாளுமன்ற வளாகத்தில் உரையாற்றினார்.
அந்த உரை 20 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த உரையாகக் கருதப்பட்டது! பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டபடி, பண்டித நேரு ஒரு ஜனநாயகப் பண்பாளர்.
நேருவின் கொள்ளுப் பேரனின் நாடாளுமன்ற உரையை நடுநிலை யோடு நோக்கினால், இந்தியாவில் இன்று சீரழிக்கப்படும் ஜனநாயக நெறிமுறைகளால் சூறையாடப்பட்டுக் கொண்டிக்கும் மத நல்லிணக்கங்களால், இந்த நாடே கலவர பூமியாகி வரும் நிலையில், ராகுலின் உரை, நாடாளுமன்றத்தில் ஆற்றப்பட்ட சிறந்த உரைகளில் ஒன்றாகவே கருதப்படக் கூடியது!
அந்த உரை ஆளுவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது; அந்த உரையிலிருந்த தாக்கத்தின் தகிப்பு அது எதிர் கொண்ட விளைவுகளால் உணர முடிகிறது! பேச்சின் சில பகுதிகள் நள்ளிரவில் நீக்கப்படுகிறது. அவரது பேச்சால் அதிர்ந்த ஆளும்கட்சியினர், பந்தை விட்டுஆளை அடிக்கும் பரிதாப விளையாட்டு வீரனின் நிலைக்குத் தள்ளப்பட்டனர்!
தனது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஆளும் கட்சியினருக்கும், அவையினருக்கும் நன்றி செலுத்தும் வகையில் அவர் அனுப்பிய பறக்கும் முத்தத்தை (Flying Kiss) சிலர் பிடித்து வைத்துக்கொண்டு, அது தங்களுக்காக அனுப்பப்பட்டது என்று அவர்களாகவே அனுமானித்துக்கொண்டு அவைத் தலைவரிடம் புகார் கொடுத்து திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டனர் என்பதே, ராகுலின் அன்றையப் பேச்சு ஏற்படுத்திய தாக்கத்தின் ஆழத்தை வெளிப்படுத்துவதாக அமைந்து விட்டது.
மணிப்பூரில் கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று தான் பார்த்ததையும், அங்கு சந்தித்தவர்கள் தந்த தகவல்களையும் ராகுல் அவையிலே அடுக்கடுக்காய் தெரிவித்தபோது அது நெஞ்சுருக வைத்தது.அன்றைய நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு பதிலளிக்க வந்த பிரதமர், மணிப்பூர் குறித்து பேசுகையில், சிலர் பாரத மாதாவின் மரணத்துக்கு ஆசைப் படுகின்றனர்; என சூசகமாக, ராகுலின் பெயரைக் குறிப்பிடாமல் பேசினார்.
மணிப்பூரில் நடந்த அவலங்கள் குறித்து உண்மையான கவலை ஆளுவோரிடம் இருந்திருந்தால், “வாருங்கள் அனைவரும், கட்சிக் குரோதங்களை மறந்து ஒன்றாக இணைந்து மணிப்பூர் மக்களுக்கு நடந்த அநீதிக்குத் தீர்வு காண்போம். அமைதியை நிலைநாட்டுவோம்” – என்று பேசியிருக்க வேண்டிய பிரதமர், பிரச்சினை குறித்து விளக்கம் தராது, மன்றத்தில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய பிரச்சினை பற்றிப் பேசாது அரசியல் மேடையில் பேசுவது போலத் தனது பதிலுரையைத் தந்துவிட்டார்!
இரண்டு நாட்கள் நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சி சார்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களைக் கேட்க வராத பிரதமர், விவாதங்களுக்குப் பதில் சொல்ல சில மணித்துளிகள் முன்பு அவைக்கு வந்து அமர்கிறார்.
நாடாளுமன்றத்துக்குள் அவர் நுழைந்தபோது ஆளும்கட்சியினர் அவரை வரவேற்று மேசைகளைத் தட்டி, “மோடி…மோடி” என்று குரல் எழுப்பியது, அது இந்த ஆண்டின் மிகப்பெரும் நகைச் சுவையாகவே தோன்றியது. ஒரு பிரதமர் நாடாளுமன்றத்துக்குள் வருவதையே, ஏதோ மாபெரும் சாதனையை அவர் நடத்திக்காட்டியது போல பி.ஜே.பி.யினர் கூச்சல் எழுப்பி, மேசையைத் தட்டி ஆர்ப்பரித்தது, பி.ஜே.பி. அரசில் நாடாளுமன்ற ஜனநாயகம் கேலிக்கூத்தாகி விட்டதையே காட்டியது!
ஆம்; அந்த கணத்திலேயே ராகுல் காந்தி உயர்ந்தார், மோடி தாழ்ந்து போனார்! கொடுங்கோலர் ஆட்சியில் எதிர்கால இந்திய ஜனநாயகம் என்ன ஆகுமோ என்று எண்ணி நடுங்கிய நாட்டு மக்களுக்கு விடியல் தெரியத் தொடங்கியது.
வாரிசு அரசியல் என்று ஏளனம் செய்து பார்த்தனர். அந்த வாரிசின் இரத்தம்தான் இன்று இந்தியாவின் ஒரு பகுதி மக்களுக்காகத் துடித்து நின்றது! சுதந்திர இந்தியா அந்த வாரிசின் குடும்பம் சிந்திய ரத்தத்திலும் உருவானதுதான் என்பதை மறந்திட இயலாது.
“கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்தது போல” புகுந்து ஆட்சி பீடம் ஏறியவர்கள், அந்தக் குடும்பங்களை ஏளனம் செய்கின்றனர்! இன்று இந்திய நாடு சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறது என்றால் அந்த வாரிசுகளின் மூதாதையர் செய்த தியாகங்கள் எத்தனை… எத்தனை… என்பதை வரலாறுகள் உணர்த்திடும்.
நரேந்திர மோடி அவர்கள் பிறந்ததே 1950ஆம் ஆண்டில்! சுதந்திரப் போராட்டங்களைப் படித்தறிந்தவரே தவிர பார்த்தறிந்தவரல்ல; அவர் ஏற்றுக்கொண்ட தலைவர்கள் பலர் அவருக்கு ஊட்டிய உணர்வுகள், மத துவேஷம்… வகுப்பு வாதம்! ஆனால் அவர் அழித்து ஒழித்திட நினைக்கும் கட்சித்தலைவர்கள் ஊனோடு, உணர்வோடு கலந்தது மதச்சார்பின்மை! ஏற்றத்தாழ்வற்ற சமூக நீதி! இந்துவாக, முஸ்லிமாக, கிறிஸ்துவராக, சீக்கியராக இருந்தாலும், எல்லாரும் நம் நாட்டு மக்கள். நமது உடன் பிறவாச் சகோதரர்கள், சகோதரிகள்!
இன்று நாட்டில் சகோதரத்துவத்துக்கும், பிரித்தாளும் சூழ்ச்சிக்கும் இடையே போர் தொடங்கிவிட்டது; அமைதிக்கும் அழிவுக்குமிடையேயான யுத்தம் உருவாகி விட்டது!
சகோதரத்துவம், அமைதி, ஜனநாயகம், மதச்சார்பின்மை என்ற ஆயுதங்களை ஏந்தி, இந்தியா (INDIA) அணி புறப்பட்டுள்ளது. எதிராக மதத்துவேசம், மத இனக்கலவரம், சர்வாதிகாரம் என்ற ஆயுதங்களை ஏந்தி எதிரணி களத்தில்! அந்த அணியின் தோலுரிப்புப் படலங்களுக்கு ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உரை கால்கோள் நடத்தியுள்ளது!
பந்தைவிட்டு ஆளை அடிக்கத் துவங்கிவிட்ட பாரதிய ஜனதா அணியின் போக்கே, அது நிலை குலைந்துவிட்டது என்பதைத் தெளிவாகக் காட்டத் தொடங்கியுள்ளது.
‘Throw The Tyrants Out’