நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே இந்தியா கூட்டணி எம்.பிக்கள் மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்து வந்தனர்.
ஆனால் இரு அவைகளிலும் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனால் இந்தியக் கூட்டணி எம்.பிக்கள் தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மக்களவையில் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் அதன்மீது விவாதம் நடத்த வேண்டும் என்று விதி உள்ளதால் வேறு வழி இல்லாமல் சபாநாயகர் விவாதத்திற்கு அனுமதி அளித்துள்ளார்.
இதன்படி கடந்த இரண்டு நாட்களாக நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது. நேற்று ராகுல் காந்தி பேசும் போது மணிப்பூரில் பாரத மாதாவையே கொன்று விட்டீர்கள் என பா.ஜ.க அரசைக் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.
இவர் பேசும் போது மக்களவை எம்.பிக்களின் உரைகளை வெளியிடும் சன்சத் டி.வி, ராகுல் காந்தியைக் காண்பிக்காமல் தொடர்ந்து சபாநாயகரை மட்டுமே காண்பித்தது. அதேபோல் தி.மு.க எம்.பி கனிமொழி பேசும் போதும் இதுபோன்று தான் நடைபெற்றது.
இதற்கு அவையிலேயே தி.மு.க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச்சை சன்சத் டி.வியில் காட்டப்படவில்லை. ஆனால் ஒன்றிய அமைச்சர்கள் பேசும்போது அவர்களை மட்டும் காட்டப்பட்டனர். சன்சத் டி.வியின் இந்த ஒருதலைபட்ச நடவடிக்கைக்கு இந்தியா கூட்டணி எம்.பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, "நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பா.ஜ.க உறுப்பினர்கள் பேசும் போது முழுமையாக அவர்களைக் காட்டிய சன்சத் தொலைக்காட்சி, இந்தியா கூட்டணி எம்.பிக்களை மட்டும் காட்டாமல் இருட்டடிப்பு செய்கிறது. மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் சன்சத் தொலைக்காட்சிக்கு இது வெட்கமாக இல்லையா?" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.