மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் மெய்தி சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 90 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்துள்ளது.இந்த வன்முறையில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்றுள்ளனர்.
அதன் பின்னர் அவர்களை கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அதோடு இதனை தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரரையும் அடித்து கொலை செய்தனர்.மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு தற்போது அங்கு இணையம் வழங்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்து நாட்டையே உறையவைத்தது. மேலும் இதுபோன்ற பல்வேறு கொடுமையான சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தவண்ணம் உள்ளன.
இந்த வன்முறையில் பெரும்பான்மை மெய்தி சமூகத்துக்கு ஆதரவாக பாஜக அரசு செயல்பட்டு வந்தது சிறுபான்மை மக்களான குக்கிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பாஜகவில் இருந்த குக்கி சமூக எம்.எல்.ஏக்கள் கூட பகிரங்கமாக பாஜக அரசை விமர்சித்தனர்.
இந்த நிலையில், மணிப்பூரில் 2 எம்.எல்.ஏக்களைக் கொண்ட குக்கி மக்கள் கூட்டணி பாஜக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை நிறுத்திக்கொள்வதாகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளது.
இதேபோல மணிப்பூர் மாநிலத்தின் நாகா இனத்தை சேர்ந்த 10 எம்.எல்.ஏக்களும் சட்டசபைக்கு செல்ல மாட்டோம் எனவும், மணிப்பூர் மாநில அரசானது நாகா மக்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். முன்னதாக குக்கி எம்.எல்.ஏக்கள், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.