மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் மெய்தி சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 90 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்துள்ளது.இந்த வன்முறையில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்றுள்ளனர்.
அதன் பின்னர் அவர்களை கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அதோடு இதனை தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரரையும் அடித்து கொலை செய்தனர்.மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு தற்போது அங்கு இணையம் வழங்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்து நாட்டையே உறையவைத்தது. மேலும் இதுபோன்ற பல்வேறு கொடுமையான சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தவண்ணம் உள்ளன.
இதனிடையே மணிப்பூரில் ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில், அங்கு ராணுவத்தை விலக்கி அதற்கு பதில், மாநில காவல்துறையை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ராணுவத்தினர் வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில், மணிப்பூரில் குக்கி சமூக மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து வெளியேறவேண்டாம், நீங்கள் சென்றால் உள்ளூர் காவல்துறையினர் எங்களை வன்முறையாளர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள் என என ராணுவ வீரர் காலில் பெண்கள் விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் பாஜக அரசும் மீதும், மாநில காவல்துறை மீதும் சிறுபான்மை குக்கி சமூக மக்கள் நம்பிக்கை இழந்துள்ளது வெட்டவெளிச்சமாகியுள்ளது. அதோடு இன்று அங்கு மீண்டும் வன்முறை நடந்ததில், 3 பேர் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் பாஜக அரசின் இந்த முடிவு அங்கு மேலும் வன்முறையை அதிகரிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.