2014ஆம் ஆண்டு ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சியை பிடித்தது. அப்போதில் இருந்து கடந்த 9 ஆண்டுகளாக வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. மேலும் பணவீக்கம் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தற்போது கூட இந்தியாவில் வரலாறு காணாத அளவிற்கு ஒரு லிட்டடர் பெட்ரோல் விலைக்கு நிகராக ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சிலிண்டர் விலையும் விண்ணை முட்டுகிறது. இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் மூச்சு விடவே சிரமப்படுகிறார்கள்.
இந்நிலையில் ஏழைகளும், மத்திய தர வர்க்கத்தினரும் பிழைக்க வேண்டும் என்றால் பா.ஜ.க தூக்கியெறியப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கடந்த ஐந்து வருடங்களில் மோடி அரசாங்கம் வெறும் 12.2 லட்ச வேலைகளைத்தான் உருவாக்கியிருக்கிறது. இது ஆண்டுக்கு சராசரி 2.4 லட்சம் தான். ஆனால் வருடத்துக்கு 2 கோடி வேலைகள் தருவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்தார்கள்.
வேலையின்மையால் தான் தெருக்களில் கோபமும் வன்முறையும் வெளிப்படுகிறது. கற்பனை செய்ய முடியாதளவு வேலையின்மை, ரணமூட்டும் அளவுக்கான விலைவாசி உயர்வு, திட்டமிட்டு நடத்தப்படும் பா.ஜ.கவின் வெறுப்பு அரசியல் ஆகியவை பேரிடரை உருவாக்கியிருக்கின்றன.
ஏழைகளும் மத்திய தர வர்க்கத்தினரும் பிழைக்க வேண்டுமானால், பதவியிலிருந்து பாஜக தூக்கியெறியப்பட வேண்டும். இதற்கு மேல் இந்தியா தாங்காது" என தெரிவித்துள்ளார்.