மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் மெய்தி சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 90 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்துள்ளது.இந்த வன்முறையில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்றுள்ளனர்.
அதன் பின்னர் அவர்களை கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அதோடு இதனை தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரரையும் அடித்து கொலை செய்துள்ளனர்.மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு தற்போதுதான் அங்கு இணையம் வழங்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த கொடூர சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஒன்றிய அரசு தொடர்ந்து அவையை ஒத்திவைத்து வருகிறது. கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதோடு பிரதமர் நரேந்திர மோடி இன்னும் ஏன் மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்ற கேள்வியும் தொடர்ந்த எழுந்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாமல் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். மணிப்பூர் வன்முறையை தடுக்க மாநில அரசும், ஒன்றிய அரசும் தவறிவிட்டது என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க இந்தியா' கூட்டணி சார்பில் நாடாளுமன்ற எம்.பிகள் மணிப்பூர் சென்றனர். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசி பின்னர் மணிப்பூர் ஆளுநர் அனுசியாவிடம் மணிப்பூர் பிரச்சனை தொடர்பாகக் கோரிக்கை கடிதத்தை அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் மணிப்பூரில் இருந்து டெல்லி திரும்பினர். டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மக்களவை திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி "மணிப்பூரில் மூன்று மாதமாகியும் இயல்பு நிலை திரும்பவில்லை நேற்றுக் கூட அங்கு வன்முறை நடந்துள்ளது. முகாம்களில் மிக மோசமான நிலைமை உள்ளது. உணவுக்கும்கூட அவர்கள் தவிக்கும் நிலை உள்ளது. எதையும் செய்யாத தற்போதைய அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே மணிப்பூர் மக்களின் கோரிக்கையாக உள்ளது. ஒன்றிய அரசு உடனடியாக பேச்சு நடத்தி அமைதி ஏற்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்திலும் வலியுறுத்துவோம். பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களும் அவரது தாயாரும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினரே தங்களை வன்முறையாளர்களிடம் விட்டுச் சென்றாக கண்ணீருடன் தெரிவித்தனர்."என்று கூறினார்.
முன்னதாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., "மணிப்பூரில் பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்தவர்களிடம், இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.-க்கள் குறைகளை கேட்டறிந்தோம். அப்போது, மணிப்பூர் மக்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என அவர்கள் கூறினர். மணிப்பூரில் பல இடங்களில் இன்னும் ஊரடங்கு அமலில் உள்ளது. அங்கு இன்னும் அமைதி திரும்பவில்லை" எனக் கூறினார்.