நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இன்று கூடியது. காலை 11 மணிக்கு தொடங்கியவுடன் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் பிங்பகல் 2 மணிக்கு மக்களவை கூடிய போது மணிப்பூர் கலவரம் மற்றும் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து பிரதமர் மோடி பதில் அளிக்க வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தினர்.
ஆனால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத மக்களவை சபாநாயகர் அவை நாள் முழுவதும் ஒத்திவைத்தி வைத்தார். அதேவேளையில் மாநிலங்களவையிலும் இதே பிரச்சனையை எழுப்பி எதிர்கட்சிகள் முழக்கமிட்டன. மாநிலங்களவை தலைவர் இருக்கையின் அருகே திரண்ட எதிர்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூர் விவகாரத்தில் ஒன்றிய அரசு பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் பிற்பகல் இரண்டு மணிக்கு கூடியது.
அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே 38 அரசியல் கட்சிகளுடன் பேச நேரமிருக்கும் போது, மணிப்பூர் விவகாரம் குறித்துப் பேச மட்டும் பிரதருக்கு நேரமில்லையா என கேள்வியெழுப்பினார். மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு கொடுமைபடும் வேலையில், பிரதமர் மோடி சாதாரணமாக பேட்டியளித்துக் கொண்டிருப்பதாக கார்கே வேதனை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி பெரேக் ஓ.பிரயான் மணிப்பூர் சம்பவத்திற்கு பிரதமர் தார்மீக பொறுப்பேற்று அவையில் விளக்கமளிக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதேபோல் மற்ற எதிர்கட்சிகளின் உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியதால் நாளை காலை 11 மணி வரை மாநிலங்களவையை ஒத்திவைப்பதாக அவை தலைவர் ஜெக்தீப் தங்கர் அறிவித்தார். இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.