பாஜகவின் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து மோசடி புகாரில் சிக்கிவரும் நிலையில், தற்போது தமிழ்நாடு பாஜகவின் சட்டமன்ற குழுத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் மோசடி புகாரில் சிக்கியுள்ளார். நயினார் நாகேந்திரன் மற்றும் அவரின் மகன் நயினார் பாலாஜி ஆகியோர் இணைந்து பத்திரப்பதிவில் ரூ. 100 கோடி அளவு மோசடி செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்ட அறிக்கையில், "மதுரை சொக்கிகுளம் பகுதியில் உள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிலத்தில் சுமார் 1.8ஏக்கர் நிலத்தை அபகரிக்க மோசடி பத்திரபதிவுகளில் ஈடுபடுகின்றார் இளையராஜா என்னும் நபர்.
10 நபர்கள் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிலத்தை தங்களுடைய நிலம் என்றும் இந்த நிலத்தை விற்கவும், விற்கும் பணத்தை பெற்று கொள்ளவும் பொது அதிகார பத்திரத்தை இளையராஜா மற்றும் அனிஷ் என்பவர்களுக்கு மோசடியாக பத்திரப்பதிவு செய்கின்றனர். மதுரை சொக்கிகுளத்தில் உள்ள இந்த நிலத்திற்கு சம்பந்தமே இல்லாமல் திருநெல்வேலி முரப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில் 02/07/2021 அன்று பொது அதிகார பத்திர பதிவு செய்கிறார்கள். இந்த பத்திரப்பதிவை செய்யும் சார்பதிவாளர் அலுவலர் பெயர் அனந்தராமன்.
மேலும் அதே ஜூலை மாதம் இந்த கோவில் நிலத்தை குடும்ப செலவுக்காக இளையராஜா மற்றும் அனிஷ் சேர்ந்து அடகு வைப்பதாக பழனியில் உள்ள வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் 19/07/2021 அன்று பதிவு செய்கிறார்கள். இந்த பத்திரப்பதிவை செய்யும் சார்பதிவாளர் அலுவலர் பெயர் பிரஷாந்த் சந்தான கருப்பன்.
இதில் இவர்கள் யாரிடம் அடகு வைக்கிறார்கள் என்று பார்த்தல் , இளையராஜா குடும்ப செலவுக்காக அவருடைய மனைவி கவிதாவிடமே 15 லட்சம் ரூபாய்க்கு அடகு வைப்பதாக பத்திரப்பதிவு செய்கிறார் மற்றும் அனிஷ் அவருடைய தந்தை பிரகாசிடமே அடகு வைப்பதாக பதிவு செய்கிறார்கள். அதாவது கோவில் நிலத்திற்கு அடுத்தடுத்து பல பத்திரப்பதிவு உருவாக்குவதற்காக இதை செய்கிறார்கள்.இதெல்லாம் மோசடி பத்திரபதிவு என்று மாவட்ட தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டு. IG பத்திரபதிவு 29/06/2022 அன்று ஒரு சுற்றறிக்கை அனுப்புகிறார்.
IG பத்திரபதிவு ஜூன் 2022 அன்று மேற்கண்ட சுற்றறிக்கையை வெளியிட்ட அடுத்த மாதமே, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இந்த 1.3 ஏக்கர் நிலத்தை மோசடியாக பதிய சம்பந்தமே இல்லாத திருநெல்வேலி ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை அபகரித்த இளையராஜாவும், BJP கட்சியை சேர்த்த MLA நயினார் நாகேந்திரன் அவருடைய மகன் நயினார் பாலாஜி ஆகிய இருவரும் இணைந்து ஒரு மோசடி ஒப்பந்தத்தை பதிவு செய்கிறார்கள்.
மேலும் இந்த ஒப்பந்தத்தில் நயினார் பாலாஜி 46 கோடி ரூபாய்க்கு இந்த நிலத்தை வாங்க சம்மதம் என்றும் முன்பணமாக 2.5 கோடி கொடுத்துள்ளதாகவும் அதில் 50 லட்சம் ரொக்கமாக கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளளார். இந்த மோசடி பத்திரப்பதிவு மற்றும் பண பரிவர்த்தனைகள் கிரிமினல் விசாரணைக்கு உள்ள்லாக்கப்பட வேண்டும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நில மோசடி பதிவு செய்த இளையராஜா, தானே தான் இந்த நிலத்திற்கு பொது அதிகாரம் பெற்ற ஏஜன்ட் என்றும் இந்த நிலம் குலாப்தாஸ் நாராயண் தாஸ் ஆகியவர்களின் பேரன் ஜெயந்திர ஓராவுக்கு சொந்தமானது என்றும் கூறி இந்த 1.3 ஏக்கர் நிலத்தை திருநெல்வேலி ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் BJP கட்சியை சேர்த்த MLA நயினார் நாகேந்திரன் அவருடைய மகன் நயினார் பாலாஜி ஆகிய இருவரும் இணைந்து ஜூலை 2022 இல் ஒப்பந்த பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
நயினார் நாகேந்திரன் MLA அவர்களின் திருநெல்வேலி MLA பதவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு அரசியல் அழுத்தத்தின் காரணமாக இது போல மிகப்பெரிய மதிப்பு உள்ள சென்னை நிலத்தை ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு மற்றும் IPC சட்ட பிரிவுகளை மீறி இது ஆவணம் பதிவு செய்யப்பட்டதாக அறிகிறோம். எனவே MLA நயினார் நாகேந்திரன் MLA அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் “ என கூறப்பட்டிருந்தது
இந்த நிலையில், திருநெல்வேலி பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் மகனின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ராதாபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக பதியப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்து மண்டல துணை பத்திரப்பதிவு துறை தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.