அரசியல்

“மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட பாஜக, வாக்குப் பெட்டிகள்மீதும் குறி வைக்கும்..” - கி.வீரமணி எச்சரிக்கை !

தென் மாநிலம் பாஜகவை வெளியேற்றி தென்னகத்தில் பாஜக நுழைய முடியாதபடி செய்ததோ அங்கேயே, பாட்னாவுக்கு அடுத்தபடி பெங்களூருவில் கூடிய 26 கட்சிகள் பிரகடனப்படுத்தியுள்ளது, புதிய நன்னம்பிக்கை முனையாகும்!

“மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட பாஜக, வாக்குப் பெட்டிகள்மீதும் குறி வைக்கும்..” - கி.வீரமணி எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாசிச ஒன்றிய பி.ஜே.பி. அரசை வீழ்த்திட - இந்திய அரசமைப்புச் சட்ட அடிக்கட்டுமானத்தைக் காப்பாற்றிட தோன்றிவிட்டது ‘‘இந்தியா’’ 26 கட்சிகளின் கூட்டமைப்பு! மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட பி.ஜே.பி. கூட்டணி வாக்குப் பெட்டிகள்மீது குறி வைக்கும் . அதையும் காவல் காக்கும் பணி - கடமை 26 கட்சிகளின் கூட்டணிக்கு உண்டு என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு, "இந்திய ஜனநாயகத்தையும், அதன் வழிகாட்டி நெறியாக இருந்து வழிகாட்டியாக உள்ள இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க, இந்தியா என்ற நமது நாட்டின் காவலர்களாக ஆகி, இன்றைய ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சியின் எதேச்சதிகார, அடக்குமுறைக் கொடும் கதிர்வீச்சுகளிடமிருந்து மீட்டெடுக்கும் ஓர் அரிய முயுற்சிக்குப் பல்வேறு முக்கிய எதிர்க்கட்சிகளும் ஓர் அணியில் திரண்டு வந்து நிற்பது, வரவேற்கத்தகுந்த சீரிய முயற்சியாகும்! நாட்டில் இப்போது அறிவிக்கப்படாத நெருக்கடி காலம் நடைமுறையில் இருக்கிறது.

“மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட பாஜக, வாக்குப் பெட்டிகள்மீதும் குறி வைக்கும்..” - கி.வீரமணி எச்சரிக்கை !

கடந்த 9 ஆண்டுகளாக அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தைத் தகர்க்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசு!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாற்றப்படக் கூடாத அதன் அடிக்கட்டுமானத்தையே மாற்றி, நாளும் சிதைத்து வரும் ஓர் ஆட்சி ஒன்றியத்தில் கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது! வளர்ச்சி, முன்னேற்றம், கூடுதல் வேலை வாய்ப்பு, விலைவாசி குறைப்பு, விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காகப் பெருக்கம், வெளிநாட்டில் உள்ள இந்தியாவின் கருப்புப் பணத்தையெல்லாம் மீட்டெடுத்துத் திரும்பக் கொண்டு வந்து, இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தும் அளவு கொணர்வோம் என்றெல்லாம் ஆசை வார்த்தைகளைக் கூறி, முதலில் பதவியைப் பிடித்தனர் (2014).

பிறகு ‘தேச பக்தி’, அண்டை நாடுகளின் படையெடுப்பிலிருந்து எதிரிகளை முறியடிக்க என்ற சாக்கில் மேலும் கூடுதல் இடங்களைப் பெற்ற நிலையில் (2019) ஆட்சியைப் பிடித்து, தங்களது ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை அமல்படுத்தி வருவது கண்கூடு - உலகறிந்த கொடுமை!

எதிர்க்கட்சிகளை அழிக்கும் திரிசூலங்கள்! :

வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சி.பி.அய். முதலிய மூன்றும் இவர்களைப் பொறுத்து எதிர்க்கட்சியினரைக் கைது செய்து அழிக்கப் பயன்படும் ‘திரிசூலங்களாக’ நாளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதை உச்சநீதிமன்றமே பல வழக்குகளில் தீர்ப்பின்மூலம் வெளிப்படுத்தி உள்ளது வெள்ளிடை மலை!

தேர்தல் ஆணையத்தின் குறிப்பிட்ட உறுப்பினர்களுக்குத் தொடர்ந்து பல ஆண்டு, பல தடவை தொடர் பதவி நீடிப்புகள், அமலாக்கத் துறையில் பதவி நியமனம், பதவி நீடிப்பு மூன்றாவது முறை செல்லாது என்ற தீர்ப்பு, எதிர்க்கட்சியைச் சார்ந்தவரை மக்களவை துணைத் தலைவர் (டெபுடி ஸ்பீக்கர்) நியமனமே செய்யாமல், நான்கரை ஆண்டுகளும் காலியாகவே அவை நடத்தப் பெறும் அதிசய ஜனநாயகம் - இப்படி எத்தனையோ!

“மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட பாஜக, வாக்குப் பெட்டிகள்மீதும் குறி வைக்கும்..” - கி.வீரமணி எச்சரிக்கை !

இந்தியாவைக் காப்பாற்ற ‘‘இந்தியா’’ என்னும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி! :

இவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற, ‘இந்தியா’ நான்கு எழுத்து எதிர்க்கட்சிக் கூட்டணி (INDIA) எந்த கருநாடகம் - தென் மாநிலம் பா.ஜ.க.வை வெளியேற்றி தென்னகத்தில் பா.ஜ.க. No Entry - நுழைய முடியாதபடி செய்ததோ அங்கேயே, பாட்னாவுக்கு அடுத்தபடி பெங்களூருவில் கூடிய 26 கட்சிகள் பிரகடனப்படுத்தியுள்ளது, புதிய நன்னம்பிக்கை முனையாகும்!

கடந்த காலங்களில், மக்களின் அமோக ஆதரவினால் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சி அமைந்துவிடவில்லை.

சில தேர்தல் வித்தைகளினாலும், உத்திகளினாலும் பண பலம், பத்திரிகைகளின் பலம், பல வகையான ஆள்களின் திரட்டு பலம்மூலம் - அதுவும் வெறும் 37 சதவிகித வாக்காளர்களாலேயே ஆட்சியைப் பிடித்த கட்சி. 63 சதவிகித பெரும்பான்மை மக்கள் பிரதமர் மோடி தலைமைக்கு எதிராக இருந்தனர்; இப்போது அவ்வெண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது என்பதற்கு அடையாளம் பிரதமர் மோடி பல நாள்கள் பிரச்சாரம் செய்தாலும்கூட, பா.ஜ.க.வுக்குத் தோல்விதான் மிச்சம் என்ற நிலைக்கு கருநாடகம், அதற்குமுன்பு இமாச்சல பிரதேசம் போன்ற பல எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களே சாட்சியங்களாகும்.

வெளிநாடுகளுக்குப் பறந்து செல்லும் பிரதமர் மோடி, பற்றி எரியும் மணிப்பூர்பற்றி வாய்த் திறக்காதது ஏன்? :

வெளிநாட்டுக்குப் பறந்து செல்லும் நம் பிரதமர் மோடி, மணிப்பூரில் பற்றி எரியும் தீயை அணைக்கப் போதிய அக்கறை செலுத்தவில்லை; ஒருமுறை கூட பிரதமர் அந்த மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறக்கூட செல்லவில்லையே என்பதை சுட்டிக்காட்டாத ஏடுகளே இல்லை !

பல மாநிலங்களில், வெற்றி பெற்றும் ஆட்சி அமைத்த கூட்டணி கட்சிகளை பிளவுபடுத்தி, கட்சித் தாவலை வைத்து, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, கட்சி உடைப்பு, கட்சித் தாவல் என்ற பொது ஒழுக்கச் சிதைவை ஏற்படுத்துதல் இவற்றையெல்லாம் தாண்டி, அமலாக்கத்துறை மூலம், ஆளுநர்கள் மூலம் - எதிர்க்கட்சியினரை அச்சுறுத்திப் பணிய வைக்கும் ஓர் அரசியல் வியூகம் - (அமைச்சர் பொன்முடியின் பழைய வழக்கு - இப்போது புதிய விசாரணை - என்னே, விசித்திரம்!) இவற்றிற்கு முடிவு கட்டவே எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒருங்கிணைந்துள்ளன!

“மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட பாஜக, வாக்குப் பெட்டிகள்மீதும் குறி வைக்கும்..” - கி.வீரமணி எச்சரிக்கை !

காங்கிரஸ் தலைவர் கார்கேயின் முக்கிய கருத்து! :

கடந்த 17, 18,7.2023 ஆகிய இரண்டு நாள்கள் பெங்களூருவில் கூடிய கூட்டத்திற்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் ஒரு முக்கிய விஷயத்தைத் தெளிவுபடுத்தியுள்ளது - இந்த காலகட்டத்தில் மிகவும் வரவேற்கத்தகுந்த செய்தியாகும்! அதுவும் திருமதி சோனியா காந்தி முன்னிலையில்!

‘‘காங்கிரசுக்குப் பிரதமர் பதவியில் குறியில்லை; எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து தற்போதுள்ள பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். ஆட்சியை அகற்றிடுவது முக்கிய ஒரே குறிக்கோள்; ஜனநாயகம் காப்பாற்றப்படவேண்டும்‘’ என்று தெளிவுபடுத்தியுள்ளது மிகவும் தேவையான, முக்கிய அறிவிப்பு ஆகும். எதிர்க்கட்சிகளின் பலம் நாளும் உறுதியாவதால், பிரதமர் தம்முடைய திரிசூலத்தில் ஒன்றாகிய அமலாக்கத் துறையை தனது கடைசி ஆயுதமாக தி.மு.க.வை நோக்கிச் செலுத்தி, மேலும் அவரது பலத்தை இழந்து வருகிறார், நாளும்!

போணியாகாத 36 கட்சிகளின் பி.ஜே.பி. கூட்டணியாம்! :

பாட்னா கூட்டத்திற்குப் பிறகு மத்திய பிரதேசத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, தி.மு.க.விற்கு எதிராகக் கடுமையாக பேசியது, அவரது நிலைகுலைவைக் காட்டியது. அதன்பிறகு நேற்று (18.7.2023) டில்லியில் பல போணியாகாத, நாடாளுமன்ற உறுப்பினர்களே இல்லாத சில கட்சிகளின் துணைக்கொண்டு கட்சிகளின் எண்ணிக்கையை 36 என்று பெருக்கி, ஊடக வெளிச்ச வித்தைகளில் ஈடுபட்டு வருறார்!

அவரது அரசின் அடக்குமுறை வீச்சும், அச்சுறுத்தும் பேச்சும், அந்த நிலைகுலைவிலிருந்து அவரது கட்சி மீளாதது மட்டுமல்ல, நாளும் கோபத் தீயில் குதித்து, தோல்வியைத் தழுவிட ஆயத்தமாகி வருவது காலத்தின் கட்டாயம்! எது எப்படியாயினும் இந்தக் காவிகளை ஆட்சியிலிருந்து அகற்ற மக்கள் தயாராகி விட்டனர் - வடக்கு முதல் தெற்குவரை - கிழக்குமுதல் மேற்குவரை.

வாக்குப் பெட்டி ஜாக்கிரதை :

மற்றொரு அமைதிப் புரட்சி - வாக்குப் பெட்டி மூலமே இருப்பதால், இனிமேல் பா.ஜ.க., அதில் குறியாய் இருந்து வியூகம் வகுக்க முனையக்கூடும்; எதிர்க்கட்சிக் கூட்டணியினர் அதிலும் கண் வைத்து, காவல் பணி செய்து கடமையாற்றிடவும் வேண்டும்! நமது ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் இதற்குத் தொடக்க நம்பிக்கை ஒளி - வெற்றி மக்களுக்கே!

banner

Related Stories

Related Stories