தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி, மற்றும் அவரது தம்பி வீட்டில் சில நாட்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 17 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்ற நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை உறவினர், குடும்பத்தினரை கூட சந்திக்க விடவில்லை. தொடர்ந்து அவருக்கு மன அழுத்தத்தை அதிகாரிகள் கொடுத்து வந்தனர்.
இந்த சூழலில் முறையான அனுமதி, நோட்டீஸ் எதுவும் இல்லாமல் அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் கைது செய்யப்போவதாக அறிவித்திருந்த நிலையில், அவருக்கு மேலும் மன அழுத்தத்தையும் கொடுத்தது. இந்த நிலையில், அமைச்சர் செல்லும்போது திடீரென நெஞ்சுவலி ஏற்ப்பட்டது. இதனால் கதறி துடித்த அமைச்சரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், தற்போது அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே அமைச்சரின் உடலில் நிலையை காரணம் காட்டி அவர் அமைச்சராக பொறுப்பு வகித்த இலாகாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் தங்கம் தென்னரசு, மற்றும் முத்துச்சாமி ஆகியோரிடம் பிரித்துக் கொடுத்து, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவதாக ஆளுநருக்கு கடிதம் எழுதினார்.
ஆனால், இலாக்காக்களை ஏற்ற ஆளுநர், இலாகா இல்லாத அமைச்சராக தொடர செந்தில் பாலாஜியை ஏற்க மறுத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு அரசாணை மூலம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை அறிவித்தது. அதன் பின்னர் நேற்று செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதன் காரணமாக அறிவிப்பு வெளியான 5 மணி நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உத்தரவை நிறுத்திவைப்பதாக அறிவித்தார். ஆளுநரின் இந்த விவகாரம் தற்போது இந்திய அளவில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாஜக அரசு அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் செயல்பட்டுவரும் நிலையில், பாஜக ஆளாத மாநில அரசுகளுக்கு ஆளுநர் மூலம் தொல்லைகளை அளித்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த அறிவிப்பு பெரும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை குறிப்பிட்டு பல்வேறு தேசிய நாளிதழ்கள் ஆளுநரை கடுமையாக விமர்சித்துள்ளன."தனது தவறுகளில் இருந்து ஆளுநர் ரவி பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. அவரை வேறு பணிகளுக்கு மாற்றுவது பற்றி டெல்லி சிந்திக்க வேண்டும்" என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கூறியுள்ள நிலையில், இந்துதான் டைம்ஸ், தி டிரபுன் , தெலுங்கானா டுடே போன்ற நாளிதழ்களும் ஆளுநரின் செயலை விமர்சித்துள்ளன.