வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏராளமான பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாகா, குக்கி, மைத்தேயி சமூக மக்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில் மைத்தேயி சமூக மக்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், அவர்களின் இந்த கோரிக்கையை மற்றொரு முக்கிய சமூகமான குக்கி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இம்மாநிலத்தில் வன்முறைவெடுத்துள்ளது. கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக வன்முறை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பதற்காக இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று மணிப்பூர் சென்றார். தலைநகர் இம்பாலில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிஷ்ணுபூர் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மணிப்பூர் மாநில போலிஸார் அவரது காரை தடுத்து நிறுத்தினர். அவர் தொடர்ந்து செல்ல தடை விதித்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் மீது போலிஸார் கண்ணீர் புகைக்குண்டு வீசி அராஜகமாக நடந்து கொண்டனர்.
இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ராகுல் காந்தியை தடுத்து நிறுத்திய மணிப்பூர் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறேன். முக்கியமான பிரச்சினையில் பிரதமர் வாய்மூடி மௌனமாக இருக்கும் நிலையில், மணிப்பூர் மக்களுக்கு காது கொடுக்க ராகுல் காந்தி முயற்சிக்கிறார்.
அங்கு அமைதியை மீட்டெடுப்பதே இப்போது முதன்மையானதாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிரான எதேச்சதிகாரர்களின் இத்தகைய பழிவாங்கும் அரசியல் நடவடிக்கைகள் அபத்தமானது மற்றும் கண்டிக்கத்தக்கது" என தெரிவித்துள்ளார்.