மணிப்பூரில் வன்முறை நீடித்து வரும் நிலையில், இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு, ஒன்றிய அரசு ஏற்பாடு செய்துள்ளது. மணிப்பூரில் கடந்த 2017 முதல் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 2022-இல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் பாஜக-வே வெற்றி பெற்றது.
பைரேன் சிங் முதல்வராக இருக்கிறார். முன்னதாக, 2022 தேர்தலில் பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, அங்கு 53 சதவிகிதமாக உள்ள ‘மெய்டெய்’ சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்தது. அப்போதே, குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடிகள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், பழங்குடி அந்தஸ்து விவகாரம், கடந்த மே மாதம், மெய்டெய் - குக்கி ஆகிய இரண்டு தரப்பினருக்கும் இடையிலான ஆயுத மேந்திய மோதலாக உருவெடுத்தது. இந்த வன்முறை, மே 03ம் தேதி துவங்கிய நிலையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இரண்டு தரப்பிலும் இதுவரை 120 பேர் வரை உயிரிழந்துவிட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். வீடுகள், வாகனங்கள், வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. 50 ஆயிரம் பேர் மிசோரம், நாகாலாந்து மாநிலங்களுக்கு அகதிகளாக சென்று விட்ட நிலையில், பலர் காடுகளிலும் அடைக்கலம் புகுந்துள்ளனர். 47 ஆயிரம் பேர் இருப்பிடத்தை இழந்து, மணிப்பூருக்கு உள்ளேயே அரசு பாதுகாப்பு முகாம்களில் தஞ்ச மடைந்துள்ளனர்.
ராணுவம் உட்பட 50 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டும் வன்முறைக் கட்டுக்குள் வரவில்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா நான்கு நாட்கள் மணிப்பூரில் முகாமிட்டார். எனினும், அவரின் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. ஆளுநர் தலைமையிலான அமைதிக்குழுவாலும் எந்தப் பயனுமில்லை. அரசு நிர்வாகமே, இரண்டு தரப்பாக பிளவுபட்டுள்ளதால் வன்முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது பற்றி ஒன்றிய அரசு முடிவெடுக்க வேண்டும்; பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டு, அனைத்துக் கட்சியினரைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. மணிப்பூர் மாநில எதிர்க்கட்சிகள், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியைச் சந்திக்க, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக டெல்லியிலேயே முகாமிட்டன.
ஆனால், பிரதமர் மோடி கடைசிவரை எதிர்க்கட்சிகளைச் சந்திக்கவில்லை. அவர் 5 நாள் பயணமாக அமெரிக்கா, எகிப்து சென்று விட்டார். இந்நிலையில்தான், இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் 10க்கும் மேற்பட்ட கட்சிகள் கலந்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அனைத்து கட்சி கூட்டத்தில் மனிப்பூர் முன்னாள் முதலமைச்சர் ஓக்ராம் இபோபி சிங் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அவை, “கடந்த 50 நாட்களில் மணிப்பூரைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத பிரதமரின் தலைமையில் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்திருக்க வேண்டும்.
பிரதமர் தலைமையில் இந்த கூட்டம் இம்பாலில் நடந்திருந்தால் மணிப்பூர் மக்களின் வலியும், துயரமும் தேசம் அறிந்திருக்கிறது என்று மணிப்பூர் மக்கள் கொஞ்சம் நம்பிக்கையோடு இருந்து இருப்பார்கள். பிரச்சனைகளை சமாளிக்க முடியவில்லை என முதலமைச்சரே இருமுறை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். மக்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். அவரின் நிர்வாக திறமையின்மையால் தான் மக்களுக்கு இவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கு.
முதலமைச்சரை உடனடியாக மாற்ற வேண்டும். அனைத்து தரப்பு மக்களின் குறைகளையும் கேட்டு உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதரத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தாமதமின்றி வழங்க உத்தரவிட வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.