வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏராளமான பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாகா, குக்கி, மைத்தேயி சமூக மக்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில் மைத்தேயி சமூக மக்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், அவர்களின் இந்த கோரிக்கையை மற்றொரு முக்கிய சமூகமான குக்கி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு எழுந்துவந்து.
இதையடுத்து கடந்த மாதம் சராசந்தூர் மாவட்டத்தில் மணிப்பூர் பழங்குடி இன மாணவர் சங்கம் சார்பாகப் பழங்குடியின மக்கள் ஒற்றுமை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. பின்னர் இந்த வன்முறை மாநில முழுவதும் பரவியுள்ளது.
கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக வன்முறை வெடித்து வருகிறது. இந்த வன்முறையில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தாமல் அமைதி காத்து வரும் ஒன்றிய அரசைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் அமெரிக்கா செல்லும் பிரதமருக்கு மணிப்பூர் செல்ல நேரம் இல்லையா? என காங்கிரஸ் உள்ளிட்ட 10 எதிர்கட்சிகள் கூட்டாகக் கேள்வி எழுப்பியுள்ளன. அதோடு மணிப்பூர் கலவரம் தொடர்பாகப் பிரதமரை நேரில் சந்திக்கவும் நேரம் கேட்டிருந்தனர். ஆனால் பிரதமர் அனுமதி கொடுக்காமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடிக்குக் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 10 கட்சிகள் மணிப்பூர் கலவரம் குறித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், "மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறியதற்கு ஒன்றிய அரசும், மாநிலத்தில் உள்ள பா.ஜ.க அரசும்தான் பொறுப்பேற்க வேண்டும்.
மணிப்பூர் மீதான அரசியலமைப்பின் 355வது பிரிவைச் செயல்படுத்துவதில் மத்திய அரசும் மாநில அரசும் தெளிவற்ற நிலையில் உள்ளன. மணிப்பூரில் பல உயிர்களைப் பலிவாங்கிய மற்றும் ஆயிரக்கணக்கான குடிமக்களுக்கு அழிவை ஏற்படுத்திய வன்முறை குறித்து பிரதமரின் மௌனம் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இந்த வன்முறைக்கு முதலமைச்சர் என்.பிரேன் சிங் பொறுப்பேற்க வேண்டும். முன்னெச்சரிக்கை மற்றும் உடனடி நடவடிக்கை எடுத்திருந்தால் வன்முறையைத் தவிர்த்திருக்க முடியும். மாநில அரசின் பாதுகாப்பு குறைபாடு மற்றும் உளவுத்துறை தோல்விகள் உள்ளது என்பதை மாநில முதலமைச்சரே பொறுப்பேற்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.