இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததில் இருந்தே கல்வியில் இந்துத்துவா கொள்கையை எப்படியாவது புகுத்திவிட வேண்டும் என தொடர்ந்து காய்களை நகர்த்தி வருகிறது. குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் கருத்துக்களைப் பாடத்திட்டங்களில் நுழைத்துவிட வேண்டும் என தொடர்ந்து முயற்சிகளை பா.ஜ.க எடுத்து வருகிறது.
மேலும் இந்திய விடுதலைக்காகப் போராடியவர்கள் மற்றும் சமூக நீதி குறித்துப் பேசியவர்களைப் பாடத்திட்டங்களிலிருந்து நீக்கி வருகிறது. இப்படி பள்ளி பாடத்திட்டங்கள் தொடங்கி பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் வரை தனது இந்துத்துவா சித்தாந்தங்களைப் புகுத்திட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இதற்காக இந்துத்துவா கருத்துகள் கொண்டவர்களைக் கல்வி அதிகாரிகளாக நியமித்து தனது திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT), பாடப்புத்தகங்களில் பல மாற்றங்களை செய்து வருகிறது.
இதன் காரணமாக பாடநூல் மேம்பாட்டுக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள 33 கல்வியாளர்கள், பாடப்புத்தகங்களில் இருந்து தங்கள் பெயர்களை நீக்கக்கோரி, NCERT-க்கு கடிதம் எழுதியுள்ளனர்.NCERT இயக்குநருக்கு அவர்கள் எழுதிய கடிதத்தில், "மூலப் புத்தகத்தில் இருந்து தற்போது உள்ள புத்தகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திருத்தங்கள், அப்புத்தகங்களை வேறு ஒன்றாகக் காட்டுகின்றன. இதனால் அவை நாங்கள் உருவாக்கிய புத்தகம் என்று கூறி அவற்றை எங்கள் பெயருடன் இணைப்பது கடினம் என நாங்கள் உணர்கிறோம். இதனால் எங்கள் ஆக்கபூர்வமான கூட்டு முயற்சி ஆபத்தில் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.
அந்தப் பாட புத்தகங்கள் பல்வேறு பின்புலம் மற்றும் கருத்தியல்களில், அரசியல் செயற்பாட்டாளர்களின் விவாதங்கள் மற்றும் ஒத்துழைப்பால் உருவாக்கப்பட்டவை. அவை இந்திய சுதந்திரப் போராட்டம், அரசியலமைப்பு உருவாக்கம், ஜனநாயக செயல்பாடு மற்றும் இந்திய அரசியலின் முக்கிய அம்சங்களுடன் சர்வதேச வளர்ச்சி மற்றும் அரசியல் அறிவியல் பற்றிய கோட்பாடு அறிவினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டவை" என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.