ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே இரண்டு நாட்களுக்கு முன்னர் இரவு 7.30 மணியளவில் ஹவுராவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதியது. இதனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன.
அப்போது யஷ்வந்த்பூர்- ஹவுரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு கிடந்த ரயில் வெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாயின. அடுத்தடுத்து மூன்று ரயில்கள் ஒரே நேரத்தில் விபத்தைச் சந்தித்ததால் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து நாட்டையை உலுக்கியுள்ளது. தற்போது வரை 280 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 1500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மீட்புப் பணிகள் நிறைவடைந்து ரயில் வழித்தடங்களை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழு, ஒடிசா மாநில பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், இந்திய விமானப்படை என பலதரப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த சூழலில் இந்த கோர விபத்துக்கு காரணம் ஒன்றிய அரசின் அலட்சியம் என எதிர்க்கட்சிகள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஒன்றிய அரசு சிக்னல்களை புதிப்பிப்பதில் ஒன்றிய அரசு மெத்தனமாக இருப்பதாகவும், அதற்குரிய நிதியை ஒன்றிய அரசு ஒதுக்குவதில்லை என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து பிபிசி தமிழ் வலைத்தளத்தில் தட்சிண ரயில்வே எம்பிளாயிஸ் யூனியன் தொழிற்சங்க (DREU) தலைவர் பேசுகையில், ரயில் தடங்களில் உள்ள எலக்ட்ரானிக் சிக்னல்களில் கணிசமானவை பழுதடைந்து செயல்படாமல் உள்ளது என்றும், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 200 சிக்னல்கள் பழுதாகின்றன என்றால் 100 சிக்னல்கள் தான் புதுப்பிக்கப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.
மேலும், ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 4,500 கிலோமீட்டர் தூர தண்டவாளங்கள் பழுதுபட்டுவிடுகின்றன. ஆனால், ஒவ்வோர் ஆண்டும் 2500இல் இருந்து 3000 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே தண்டவாளங்கள் புதுப்பிக்கப்படுகின்றன என்றும் கூறியுள்ளார். அதோடு ரயில்வேயில் 3 லட்சத்துக்கும் மேல் காலி பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் தற்போது பணியில் இருப்பவர்கள் அதிக நேரம் வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்றும் இதுவும் விபத்துக்கு காரணம் என்றும் கூறியுள்ளார். அவரின் இந்த குற்றச்சாட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.