மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராக இருக்க ஒப்புதல் கொடுத்தால் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
ஆனால் இதற்கு உடன்படாத பாஜக தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது.அதைத் தொடர்ந்து பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.ஆனால் இந்த அரசு சில நாட்களில் கவிழ்ந்தது. அதன்பின்னர் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி வைத்த நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.
சுமார் 3 ஆண்டுகள் நீடித்த இந்த அரசு சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.
அங்கு இந்த கூட்டணி ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக பாஜக ஷிண்டேவின் சிவசேனாவுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்றும், ஆட்சியை முழுமையாக பாஜகவே கட்டுப்படுத்துகிறது என்றும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் கூட்டணியில் குழப்பங்கள் தொடர்ந்து எழுந்தன.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்து பாஜக- ஷிண்டே சிவசேனா இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் 48 தொகுதிகள் உள்ள நிலையில் அங்கு கடந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் சிவசேனா 23 இடங்களில் போட்டியிட்டது. இதனால் அதே எண்ணிக்கையிலான இடங்களை ஷிண்டே சிவசேனாவுக்கு ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அதற்கு பாஜக மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஷிண்டே சிவசேனா கட்சி தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது தொடர்பாக ஷிண்டே தரப்பு எம்.பி கஜானன் கீர்த்திகர் அளித்த பேட்டியில், முன்பு நாங்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறாமல் இருந்தோம். இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறோம். ஆனால் பாஜக எங்களை நியாயமற்ற முறையில் நடத்துகிறது" என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இதனால் மஹாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.