நாடு முழுவதும் வரும் செப்டம்பர் முதல் ரூ.2000 நோட்டுகள் செல்லுபடி ஆகாது என்று ரிசர்வ் வங்கி நேற்று இரவு அதிரடியாக அறிவித்திருந்தது. இதையடுத்து இதற்கு நாடு முழுவதும் இருந்து பல்வேறு அரசியல் தலைவர்களிடம் இருந்து பெரும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு ஊழலை ஒழிப்பதாக கூறி, இரவோடு இரவாக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அறிவித்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி, தங்களிடம் இருந்த பணத்தை ஏடிஎம்., வங்கி என வரிசையாக நின்று, சாப்பிடாமல் கூட மாற்றிக்கொண்டனர். இந்த நிகழ்வால் பொதுமக்கள் பலவகையில் துன்பங்களை அனுபவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக புது ரூ.500 நோட்டுகளும், ரூ.2000 நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது வரை இந்த ரூபாய் நோட்டுகள் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறைய தொடங்கியுள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி இந்த நோட்டுகளை திரும்ப பெறப்போவதாக நேற்று அறிவித்துள்ளது.
அதன்படி பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை வரும் மே 23 முதல் செப்டம்பர் 30 வரை வங்ககளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும், நாள் ஒன்றுக்கு ஒரு நபர் ரூ.20,000 மதிப்பிலான ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் ரூ.2000 நோட்டுகள் இனிமேல் புதிதாக புழக்கத்துக்கு வராது என்றும், ஏற்கெனவே அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்ட நோட்டுகள் செல்லும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், திடீரென ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெற போவதாக அறிவிப்பு வெளியான நிலையில், பலரும் இதற்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "ரூ.2000 நோட்டு ஒன்றும் ஊழலை ஒழிக்க வந்ததல்ல. இது பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தியதும் அல்ல. கருப்பு பணத்தை அவ்வப்போது மாற்றிக்கொண்டிருப்பவர்களுக்கு தான் இது பயன்பட்டது. இதை பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போதே நாங்கள் தொடர்ச்சியாக கூறி வந்தோம்.
ரூ.2000 நோட்டின் புழக்கத்தை நிறுத்துவார்கள் என்று எங்களுக்கு தெரியும். ரூ.1000 நோட்டுகளையும் விரைவில் இவர்கள் கொண்டு வருவார்கள். மொத்தத்தில் பணமதிப்பிழப்பு என்பது சாதாரண மக்களுக்கு எதிரானது என்பதை இந்த நடவடிக்கை உறுதி செய்கிறது." என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, "தங்கள் தொடர் தோல்விகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சி இது. எதற்காக 2016-ல் ரூ.2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தினார்கள்? இப்போது ஏன் நிறுத்துகிறார்கள் ? தங்களுடைய கொள்கைகளிலேயே தெளிவில்லாமல் இருக்கும் ஒரே ஆட்சி பாஜக ஆட்சி !" என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "வழக்கம்போல் மற்றுமொரு தவறான நடவடிக்கையை அறிவித்திருக்கிறீர்கள். சர்வாதிகார தனமான பணமதிப்பிழப்பு நடவடிக்கையை இது மீண்டும் நினைவூட்டுகிறது. கருப்பு பணம், ஊழல் ஒழிந்துவிடும் என அறிவித்தீர்கள். அது என்னவாயிற்று ? குழந்தை தனமான நடவடிக்கைளை நிறுத்தி கொள்ளுங்கள். இதனை வேண்டுகோளாகவே உங்களிடம் வைக்கிறோம் !" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "ரூ.2000 நோட்டுகள் கொண்டு வருவதன் மூலம் ஊழல் ஒழியும் என்று முதலில் கூறினார். இப்போது 2000 நோட்டுகளை தடை செய்வதன் மூலம் ஊழல் ஒழிந்துவிடும் என்று சொல்கிறார்கள்.
அதனால்தான் நாங்கள் சொல்கிறோம், பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும். படிக்காத பிரதமரிடம் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். பொதுமக்கள் அவதிப்படுவது அவருக்கு புரிவதில்லை." என்று குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், :"500 சந்தேகங்கள்.. 1000 மர்மங்கள்.. 2000 பிழைகள்!.. கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்!" என்று குறிபிட்டு விமர்சித்துள்ளார்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "ரூ.2000 நோட்டு சலுகை அல்ல.. கோடிக்கணக்கான இந்தியர்களை ஏமாற்றும் செயல். என் அன்பு சகோதர சகோதரிகளே விழித்துக் கொள்ளுங்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாம் பட்ட துன்பங்களை மறக்க முடியாது, அந்த துன்பத்தை கொடுத்தவர்களை மன்னிக்க முடியாது." என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "முதல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் பொருளாதாரத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்தினீர்கள். இப்போது ரூ. 2000 நோட்டின் இரண்டாவது பணமதிப்பு நீக்கம். இது தவறான முடிவு. நியாயமான விசாரணை நடந்தால் ஊழலின் உண்மை வெளிவரும்." என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.