கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதிஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி (நேற்று) இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
ஒட்டுமொத்தமாக 135 தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த வெற்றி வரும் நாடாளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது. இந்த தேர்தலில் மோடி பல முறை கர்நாடகா வந்து பிரச்சாரம் செய்தும் பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதோடு இந்த தேர்தலில் முக்கியமாக பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர்.
இந்த நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமையவுள்ள நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகிறது. ஏனெனில் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையாவுக்கும், கர்நாடக காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவகுமாருக்கும் போட்டி நிலவி வரும் நிலையில், இன்று மாலை கூடும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு அறிவிக்கப்படவுள்ளது.
முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவின் அரசியல் பயணம் குறித்த ஒரு பார்வை :
மைசூர் மாவட்டம், வருணா ஒன்றியத்தில் உள்ள சித்தராமனஹுன்டி என்ற கிராமத்தில் ஆகத்து 12, 1948-ம் ஆண்டு பிறந்த சித்தராமையா வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். படிக்கின்ற காலத்திலேயே அரசியலில் ஆர்வம் காட்டிய இவர் 1978 ஆம் ஆண்டு அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார்.
தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு பாரதீய லோக் தளம் கட்சி சார்பில் மைசூர் மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்ட சித்தராமையா அதில் வெற்றிபெற்றார். பின்னர் 1985-ல் ஜனதா கட்சிக்கு சென்ற அவர் அதே ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் சாமுண்டீஸ்வரி தொகுதியில் நின்று வெற்றிபெற்றார்.
தொடர்ந்து அரசியலில் ஏறுமுகம் கண்ட சித்தராமையா 1992-ம் ஆண்டு ஜனதா தளம் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜனதா தளம் கட்சியில் இருந்தபோது கர்நாடக மாநில துணை முதல்வராகவும், அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் ஜனதா தளம் கட்சி பிளவுண்ட போது மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இணைந்த அவர் அக்கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றார். அதன்பின்னர் தேவகவுடாவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர் 2007 ஆம் ஆண்டு மீண்டும் தனது சாமுண்டீஸ்வரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் தொடர்ந்து 2 முறை கர்நாடக மாநில துணை முதலமைச்சராக பதவி வகித்த அவர், 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் அம்மாநில முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட சித்தராமையா, சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வியைத் தழுவினார். எனினும் பதாமி தொகுதியில் வெற்றிபெற்றார். இந்த முறை சாமுண்டீஸ்வரி தொகுதியை தவிர்த்து வருணா தொகுதில் போட்டியிட்ட சித்தராமையா அதில் வெற்றி பெற்றுள்ளார்.