கர்நாடக மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த சில மாதங்களாகவே கர்நாடகாவில் மதமோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.
மேலும் அம்மாநில அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதை பாஜக சட்டமன்ற உறுப்பினர்களே இந்த புகார்களை எழுப்பி வருகின்றனர். அதிலும் சில நாட்களில் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கருத்துக்கணிப்புகளில் ஆளும் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.
இதனால் பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தோடு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், பாஜகவின் முக்கிய தலைவர்கள் சர்ச்சையில் சிக்கிக்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இது தவிர முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கொடுக்காத நிலையில் அவர்கள் அங்கிருந்து விலகுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முக்கிய தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் பாஜகவிலிருந்து விலகியுள்ள நிலையில் தற்போது அது பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை அளித்து வருகிறது.
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி கர்நாடகாவுக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்றிருந்தார். அப்போது மைசூரு பகுதியில் பிரசார வாகனத்தில் நின்று ஊர்வலம் சென்றார். அவருடன் பாஜக வேட்பாளர்கள், எம்பி பிரதாப் சிம்ஹா, முன்னாள் அமைச்சர் கேஎஸ் ஈஸ்வரப்பா உள்ளிட்டவர்கள் இருந்தனர்.
அப்போது அவரை நோக்கி திரண்டிருந்த தொண்டர்கள் மலர் தூவியபோது திடீரென மோடியை நோக்கி ஒரு மொபைல்போன் ஒன்று பறந்து வந்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக செல்போன் பிரதமர் மோடி மீது விழவில்லை என்றாலும் மோடியின் பிரசார வாகனத்தின் மீது விழுந்தது.
அந்த மொபைல் போனை வீசிய யார் என்று போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவந்த நிலையில், இந்த நிலையில் தற்போது அந்த செல்போன் பாஜக தொண்டர் ஒருவருடையது என தெரியவந்துள்ளது. மேலும் மோடியை பார்த்த மகிழ்ச்சியில் கைகளை வேகமாக அசைத்தபோது செல்போன் தவறி எறியப்பட்டதாகவும் போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே நேரம் இதே சம்பவம் பாஜக ஆளாத மாநிலங்களிலோ அல்லது சம்மந்தப்பட்ட நபர் இஸ்லாமியராகவோ இருந்து இருந்தால் பாஜக இந்த சம்பவத்தை எப்படி மாற்றியிருக்கும் என பலரும் விமர்சித்து வருகின்றார்.