கர்நாடக மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த சில மாதங்களாகவே கர்நாடகாவில் மதமோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.
மேலும் அம்மாநில அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதை பாஜக சட்டமன்ற உறுப்பினர்களே இந்த புகார்களை எழுப்பி வருகின்றனர். அதிலும் சில நாட்களில் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கருத்துக்கணிப்புகளில் ஆளும் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.
இதனால் பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தோடு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், பாஜகவின் முக்கிய தலைவர்கள் சர்ச்சையில் சிக்கிக்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இது தவிர முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கொடுக்காத நிலையில் அவர்கள் அங்கிருந்து விலகுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முக்கிய தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் பாஜகவிலிருந்து விலகியுள்ள நிலையில் தற்போது அது பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை அளித்து வருகிறது.
இந்த நிலையில் ராகுல் காந்தி தற்போது கர்நாடகாவுக்கு சென்று அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர் "கர்நாடகா பாஜக அரசு 40 சதவீத கமிஷன் வாங்கும் அரசாக இருக்கிறது. கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் 150க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கப் போவது உறுதி. இதனை யாராலும் தடுக்க முடியாது" என்று கூறியுள்ளார்.
மேலும் "இதனால் கர்நாடகாவில் பாஜவுக்கு 40 சீட் மட்டும் தான் கிடைக்கும். பாஜவுக்கு பிடித்த நம்பராக 40 உள்ளது. இதன் காரணமாகதான் பாஜக அரசு செய்யும் அனைத்து பணிகளிலும் 40 சதவீத கமிஷனை பெறுகிறார்கள்" என்று கூறியுள்ளார்.