கர்நாடகாவில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கிருக்கும் ஆளுங்கட்சி பாஜக, எதிர்க்கட்சி காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும் தங்களை ஆயத்தப்படுத்தி வருகிறது. பாஜகவில் இருந்தால் மரியாதை இல்லை என்று அண்மையில் கூட பாஜக மூத்த நிர்வாகி ஜெகதீஷ் ஷெட்டர் தனது MLA பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரஸில் அதிரடியாக இணைந்தார்.
தற்போது ஒவ்வொரு தொகுதிக்கும் அந்தந்த கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் காங்கிரஸ் வேட்பாளராகளுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர்.
இந்த சூழலில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் மனைவி கீதா, தன்னை காங்கிரஸில் இணைத்துக்கொண்டார். கன்னட திரையுலகில் பிரபல மூத்த முன்னணி நடிகராக இருக்கும் சிவராஜ் குமார் கடந்த 1986-ல் முன்னாள் முதலமைச்சர் சரகோப்பா பங்காரப்பாவின் மகளான கீதாவை திருமணம் செய்துகொண்டார்.
சரகோப்பா பங்காரப்பா காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாடி, மதசார்பற்ற ஜனதா தல் ஆகிய காட்சிகளில் இருந்தார். இவருக்கு 5 பிள்ளைகள் இருக்கும் நிலையில், அதில் குமார் என்பவர் பாஜகவிலும், மது என்பவர் காங்கிரசிலும் செயல்பட்டு வருகின்றனர். இவர்களது சகோதரியான கீதா பெரிதாக அரசியலில் ஈடுபடாத நிலையில், தற்போது காங்கிரஸில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் சகோதரர் மது பங்காரப்பாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கவுள்ளார்.
அதன்படி நேற்று பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் அக்கட்சியில் இணைந்தார். அப்போது கீதாவின் சகோதரரும், சரோபா தொகுதி எம்எல்ஏவுமான மது பங்காரப்பா உடனிருந்தார்.
காங்கிரஸில் இணைந்த கீதா கூறுகையில், கடந்த மக்களவைத் தேர்தலின்போதே காங்கிரஸில் இணைய நினைத்திருந்தேன். தற்போது கட்சியில் இணைந்திருக்கிறேன். காங்கிரஸின் வெற்றிக்காக பாடுபடுவேன். நானும் எனது கணவரும் நாளை (இன்று) முதல் என் சகோதரர் மது பங்காரப்பாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருக்கிறோம்" என்றார்.
ஏற்கனவே காங்கிரஸுக்கு ஆதரவாக நடிகையும், முன்னாள் எம்.பியுமான ரம்யா உள்ளிட்ட பல முக்கிய திரை பிரபலங்கள் இருக்கும் நிலையில், தற்போது சிவராஜ் குமாரின் மனைவியும் கட்சியில் இணைத்ததோடு, சிவராஜ் குமாரையும் உடன் சேர்த்து பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளது காங்கிரஸுக்கு பலம் அதிகரித்து வருவதை தெளிவுபடுத்துகிறது.
கீதாவின் அண்ணன் குமார் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் இவரது தம்பி மதுவுக்கு ஆதரவாக கீதா மற்றும் அவரது கணவர் சிவராஜ் குமார் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர்.