டெல்லி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 250 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் 4-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 50.48% வாக்குகள் பதிவாகிய நிலையில், காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக என மூன்று முனை போட்டி நிலவியது.
இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 வார்டுகளில் வெற்றிபெற்று முதல் முறையாக டெல்லி மாநகராட்சியை தன்வசப்படுத்தியது. டெல்லி மாநகராட்சியில் 2007-ம் ஆண்டு முதல் ஆட்சியிலிருந்த பா.ஜ.க 104 வார்டுகளில் மட்டுமே வெற்றிபெற்றது.
டெல்லி மாநகராட்சியில் மேயர் பதவிக்கான தேர்தல் ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது வழக்கம். இந்த மேயர்பதவி, முதல் வருடம் மகளிருக்காகவும், மூன்றாவது வருடம் பட்டியல் இனத்தவருக்கும் என ஒதுக்கப்பட்டுள்ளது. இதர மூன்று வருடங்களும் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்படும்.
டெல்லி மாநகராட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி சார்பில் முதலாம் ஆண்டுக்கான மகளிர் மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக தனது திள்ளுமுள்ளு அரசியலை வழக்கம் போல டெல்லியிலும் ஆடத்தொடங்கியது. அவையை பாஜக நடத்த விடாததன் காரணமாக 3 முறை மாநகராட்சி மேயர் தேர்தல் நடைபெறாமல் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்பின்னர் நீதிமன்றம் தலையிட்டதன் காரணமாக ஒருவழியாக டெல்லி மேயர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய் 150 வாக்குகள் பெற்று பாஜகவை வீழ்த்தி டெல்லியின் புதிய மகளிர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் ஓராண்டு நிறைவடைவதை ஒட்டு தற்போது பொதுபிரிவினருக்குரிய மேயர் தேர்தல் நடைபெற்றது.
இதில் ஆம் ஆத்மி கட்சி ஷெல்லி ஓபராயையே வேட்பாளராக நிறுத்தியது. பாஜக சார்பில் சிக்ஷா ராய் மேயர் பதவிக்கு போட்டியிட்டார். இந்த தேர்தல் நெருங்குகையில் ஆம் ஆத்மியின் இரண்டு உறுப்பினர்கள் பாஜகவின் இணைந்தனர். இதனால் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில் வெற்றிபெற போதிய ஆதரவு இல்லாத நிலையில் பாஜகவின் மேயர் வேட்பாளர் சிக்ஷா ராய் தனது வேட்புமனுவை திருப்பப்பெற்றார். இதனால் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாஜகவால் கூடுதல் உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்க முடியாததுதான் பாஜக வேட்பாளர் வேட்புமனுவை திரும்பப்பெற காரணம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.