பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சிறுபான்மையினருக்கு எதிரான மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவ கும்பலின் அட்டுழியம் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.
பசு இறைச்சி வைத்துள்ளதாக பொதுமக்கள் அடித்து கொள்வதும், காதலர்கள் ஒன்றாக இருந்தால் அவர்களை அடித்து விரட்டுவதும் என நாட்டில் மதவாத வன்முறைகளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. சமீபத்தில் பாஜக ஆளும் கர்நாடகாவில் கர்நாடகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டதும் அதற்கு ஆதரவாக பாஜக ஆதரவு அமைப்புகள் கலவரம் செய்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதவிர உண்மையை வெளியிடும் பத்திரிகைகளை மிரட்டுவதும், பத்திரிகையாளர்களை தாக்குவது போன்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளது. அதன் உச்சகட்டமாக கௌரி லங்கேஷ் போன்ற பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டதும் நடந்தது.
இந்த நிலையில், இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம், மத மற்றும் இன சிறுபான்மையினரை குறிவைக்கும் வன்முறை உள்ளிட்ட மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகம் நடைபெற்றுள்ளதாக அமெரிக்காவின் வெளிவிவகார துறை அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் வெளிவிவகார துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சார்பில் உலக நாடுகளின் மனித உரிமை மீறல் குறித்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில், ரஷ்யா, சீனா, ஈரான், வட கொரியா, மியான்மர் போன்ற நாடுகளில் பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் 2022ம் ஆண்டில் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், பத்திரிகை சுதந்திரம், மத மற்றும் இன சிறுபான்மையினரை குறிவைக்கும் வன்முறை உள்ளிட்ட மனித உரிமை மீறல் வழக்குகள் அதிகம் பதிவாகியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
அதோடு, அரசியல் தடுப்புக்காவல், தன்னிச்சையான கைதுகள் அல்லது தடுப்புக்காவல்கள், ஊடகத்தின் மீதான கட்டுப்பாடுகள், ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை உள்ளிட்ட மனித உரிமை மீறல் சம்பவங்களும் அதிகஅளவில் நடந்துள்ளன என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.