முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் பதவிக்குப் பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை பதவி உருவாக்கப்பட்டது. இதையடுத்து ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் பதவி வகித்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை உச்சத்தை எட்டியதால் இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. பிறகு கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்து வெளியேறினார்.
இதனால் அ.தி.மு.க இரண்டாக உடைந்து இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் அணி என்று செயல்பட்டு வருகிறது. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
இதற்கிடையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அ.தி.மு.கவில் சாதாரண தொண்டன் கூட பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடலாம் என்ற எம்.ஜி.ஆர் உருவாக்கிய விதியை மாற்றி 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிந்தால் மட்டுமே போட்டியிட முடியும் என்ற விதியை ஏற்படுத்தித், தான் மட்டுமே போட்டியிட முடியும் என்ற நிலையை எடப்பாடி பழனிச்சாமி ஏற்படுத்தியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தல் "பிக் பாக்கெட்" அடிப்பது போல் உள்ளது. அ.தி.மு.கவை அழிக்கும் நாசகார சக்தியாக பழனிசாமி உள்ளார். என தெரிவித்துள்ளார்.