பிரதமர் மோடி போலவே புதுச்சேரியில் உள்ள அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் தனியாருக்கு வழங்கி, சின்ன மோடியாக முதல்வர் ரங்கசாமி செயல்பட்டு வருகிறார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி,"பிரதமர் மோடி கடந்த 2015 ஆம் ஆண்டுகளில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும்போது நான் ஏன் இந்தியாவில் பிறந்தேன் என தெரியவில்லை என வருந்திக் கூறியிருந்தார். அப்போது எதுவும் பேசாத பா.ஜ.கவினர் இப்போது வந்து இந்திய நாட்டை ராகுல் காந்தி அவமதித்து விட்டதாகக் குற்றம்சாட்டி வருகின்றனர் .
புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை என்பது உப்புசப்பு இல்லாத உரையாக இருந்தது. முதல்வர் ரங்கசாமி பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கடந்த ஆண்டில் எவ்வளவு நிதியைச் செலவு செய்தோம் என்பதைக் குறிப்பிடவில்லை.
ரூ.8 ஆயிரம் கோடிதான் செலவிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஆதிதிராவிட மக்களுக்குக் கடந்த ஆண்டு ஒதுக்கிய ரூ 166 கோடியை இந்த அரசு செலவு செய்யவில்லை. இதேபோல் பல்வேறு துறைகளிலும் ஏராளமான நிதி செலவு செய்யாமல் ஒன்றிய அரசுக்குத் திருப்பி அனுப்பியுள்ளார்கள். இதை பட்ஜெட்டில் மூடி மறைத்துள்ளார்கள்.
இந்தாண்டு தாக்கல் செய்த ரு.11,600 கோடி பட்ஜெட்டில் ரூ.9 ஆயிரம் கோடி சம்பளம், மின்சாரம் வாங்குதல் இவைகளுக்கு ஒதுக்கப்படுகின்றதது. மீதமுள்ளது ரூ.2,600 கோடியில், சாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளைச் சரிசெய்வதற்கு பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
மேலும் பேரவையில் முதல்வர் ரங்கசாமி சிலிண்டருக்கு ரூ.300 மானியம், மகளிருக்குப் பேருந்தில் இலவச பயணம், பெண் குழந்தைகளுக்கு வைப்பு நிதி என பெண்களுக்கு பயணளிக்கும் திட்டங்களை அறிவித்தது பாராட்டுக்குரியது. அதே வேலையில் இந்த திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யாத நிலையில், எப்படி அறிவித்த திட்டங்களை செயல்படுத்த முடியும்?
பிரதமர் மோடி போலவே புதுச்சேரியில் அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் தனியாருக்கு வழங்க முடிவு செய்தது, அனைத்து பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்த்துக்கொடுத்து விட்டு சின்ன மோடியாக முதல்வர் ரங்கசாமி புதுச்சேரியைத் திவாலாக்கி வருகின்றார் என தெரிவித்துள்ளார்.