வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் என்பிபி 26 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவானது. மேலும், காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், பாஜக இரண்டு இடங்களிலும் வெற்றிபெற்றன.
புதிதாக களமிறங்கிய திரிணமூல் காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் வென்றி பெற்றநிலையில், மற்ற கட்சிகள் 23 இடங்களில் வெற்றி பெற்றது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், என்பிபி கட்சி ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியது. அதற்கு பாஜக ஆதரவு அளிப்பதாகவும் அறிவித்தது.
மேலும், சில கட்சிகள் ஆதரவு கிடைத்தால்தான் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அதே நேரம் பிராந்திய கட்சியான எச்எஸ்பிடிபி கட்சியானது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் கூட்டணி வைக்க முடிவு செய்திருந்தது.
ஆனால், எச்எஸ்பிடிபி கட்சி சார்பில் வெற்றிபெற்ற இரண்டு எம்.எல்.ஏக்கள் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தன. இது அந்த கட்சியின் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எம்.எல்.ஏக்களின் முடிவுக்கு கட்சி தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ ஒருவரின் அலுவலகத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் அலுவலகம் தீக்கு இரையானது.
இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைத்ததன் காரணமாகவே கட்சி தொண்டர்கள் எம்.எல்.ஏ அலுவலகத்துக்கு தீ வைத்தனர் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.