ஈரோடு கிழக்கு… எடப்பாடியின் 8-வது தோல்வி !
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வின் ஏகபோக தலைவராகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயன்றார் எடப்பாடி பழனிசாமி. அவர் முன்னின்று எதிர்கொண்ட 8 தேர்தல்களில் ஒன்றில் கூட எடப்பாடி பழனிசாமியால் வெற்றி பெற முடியவில்லை. அதனை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1. ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் !
முன்னாள் முதலவர் ஜெயலலிதா இறந்ததால் காலியான சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு 2017 ஏப்ரலில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தத்தால் அ.தி.மு.க இரண்டாகப் பிளவுபட்டது. சசிகலா அணி சார்பில் டி.டி.வி. தினகரனும், பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிட்டனர். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் சசிகலா அணிக்குத் தொப்பி சின்னமும் ஓ.பி.எஸ் அணிக்கு இரட்டை மின்கம்பம் சின்னமும் ஒதுக்கப்பட்டது. தினகரன் வெற்றி பெறுவதற்காக வாக்காளர்களுக்கு பணம் வாரி இறைத்தாக புகார் எழுந்தது. பணப்பட்டுவாடா புகாரில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை போட்டனர். இதனால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் கமிஷன். அதன்பிறகு தினகரன் ஒதுக்கப்பட்டார். ஓ.பி.எஸ் இ.பி.எஸ் அணிகள் இணைந்தன. பன்னீர்செல்வம் துணை முதல்வர் ஆனார். முடக்கப்பட்ட இரட்டை இலையை உடனே ஒதுக்கியது தேர்தல் ஆணையம். அடுத்த நாளே ஆர்.கே.நகர் தேர்தல் தேதியையும் அறிவித்தார்கள்.
2017 டிசம்பர் 21-ம் தேதி நடந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாகக் குக்கர் சின்னத்தில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டார். ஆளும் அ.தி.மு.க-வின் வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் மதுசூதனன் நிறுத்தப்பட்டார். 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் மதுசூதனனைத் தினகரன் வீழ்த்தினார். சில தேர்தல்களில் ஒன்றிரண்டு தொகுதிகளில் சுயேச்சைகளை ஜெயிக்க வைத்த அ.தி.மு.க, ஒரு சுயேச்சையிடம் தோற்றுப் போன வரலாற்றை முதன்முதலில் எழுதினார் எடப்பாடி பழனிசாமி. 2004-ம் ஆண்டுக்குப் பின்னர் தமிழகத்தில் இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியைத் தழுவியதும் முதன்முறையாக அப்போதுதான்.
2. 2019 நாடாளுமன்றத் தேர்தல் !
2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் - புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதிகளை தி.மு.க கூட்டணி கைப்பற்றியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி - துணை முதல்வர் பன்னீர் தலைமையிலான அ.தி.மு.க கூட்டணி ஒரு இடத்தில்தான் வென்றது. தமிழகத்தின் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியிருக்கின்றன. வாக்கு எண்ணிக்கையும் சட்டசபைத் தொகுதிவாரியாக எண்ணப்பட்டு, பிறகு ஆறு தொகுதிகளின் வாக்குகளையும் கூட்டி, முடிவுகள் வெளியிடப்படும். அந்த அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிக்குள் அடங்கியிருந்த சட்டசபைத் தொகுதிகளில் இருந்த எடப்பாடி பழனிசாமி அரசின் மந்திரிகள் தோற்றுப் போனார்கள். பன்னீர்செல்வம் மட்டுமே அவருடைய போடி தொகுதியில் தி.மு.க கூட்டணியைவிட அதிக ஓட்டு வாங்கியிருந்தார். சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்குள்தான் எடப்பாடி பழனிசாமியின் சட்டசபைத் தொகுதியான எடப்பாடி தொகுதி வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி வாங்கிய வாக்குகள் 96,485. தி.மு.க. கூட்டணி பெற்ற ஓட்டுகள் 1,04,573. அ.தி.மு.க. கூட்டணியைவிட, தி.மு.க. கூட்டணி 8,088 வாக்குகள் அதிகம் வாங்கியது. அதாவது, எடப்பாடி சட்டசபைத் தொகுதியில் முதல்வராக இருக்கும் பழனிசாமி தோற்றிருந்தார். 2016 சட்டசபைத் தேர்தலில் 42,022 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்த எடப்பாடி பழனிசாமி, 8,088 ஓட்டுகள் குறைவாகப் பெற்று, பின் தங்கியிருந்தார். 2016 சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வென்ற அ.தி.மு.க அமைச்சர்கள், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க., தே.மு.தி.க., பி.ஜே.பி., த.மா.கா. கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தும், முன்பைவிட கூடுதல் வாக்குகளை வாங்க முடியவில்லை. மாறாகத் தோல்வி அடைந்தனர்.
3. 22 தொகுதிகள் இடைத் தேர்தல் !
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாகத் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ-கள் ஆளுனர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தனர். 18 பேரைத் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இதனால், 18 தொகுதிகள் காலியானது. திருவாரூரில் கலைஞர், திருப்பரங்குன்றத்தில் போஸ் சூலூரில் கனகராஜ் ஆகியோர் மரணமடைந்ததால் தொகுதிகள் காலியானது. பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தாக குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அமைச்சர் பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ பதவியை இழந்தார். இதனால், அவருடைய ஒசூர் தொகுதி காலியானது. இந்த 22 தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலோடு 2019-ல் இடைத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தி.மு.க 13 தொகுதிகளிலும் அ.தி.மு.க 9 தொகுதிகளிலும் வென்றது.
4. ஊரக உள்ளாட்சித் தேர்தல் !
உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் நீதிமன்றத்தில் வாய்தா வாங்கிக் கொண்டிருந்த எடப்பாடி அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துத் தேர்தலை நடத்த உத்தரவிட்டது. இதனால், 2019 டிசம்பர் மாதம் 9 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. மொத்தமுள்ள 513 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களில் தி.மு.க 243 இடங்களையும் அ.தி.மு.க 214 இடங்களையும் பிடித்தது. மொத்தமுள்ள 5,087 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களில் தி.மு.க 2,100 இடங்களைப் பிடித்தது. அ.தி.மு.க-வுக்கு 1,781 இடங்கள் கிடைத்தது. தி.மு.க கூட்டணிக் கட்சிகள் பிடித்த இடங்களையும் கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை இன்னும் கூடும்.
5. 2021 சட்டமன்ற தேர்தல் !
2021-ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. தி.மு.க கூட்டணி 159 இடங்களையும் அ.தி.மு.க கூட்டணி 75 தொகுதிகளையும் கைப்பற்றியது.
6. ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் !
புதிதாகப் பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2021 அக்டோபரில் தேர்தல் நடைபெற்றது. மாவட்ட கவுன்சில் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சில்களில் பெரும்பான்மை இடங்களை ஆளும் தி.மு.க கைப்பற்றியது.
7. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் !
2022 பிப்ரவரியில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து இடங்களை வாரிச் சுருட்டியது தி.மு.க கூட்டணி. அந்த தேர்தலில் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையிலான இடங்கள் வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமாக இருந்தது.
8. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் !
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே இரண்டு அணிகளாகப் பிரிந்து கிடந்த பன்னீரும் பழனிசாமியும் கோதாவில் குதித்தனர். இடைத் தேர்தலில் வெற்றி பெறுவதைவிடக் கட்சியின் சின்னமும் கொடியும் தங்கள் வசம் இருக்க வேண்டும் என மல்லு கட்டினார்கள். உச்ச நீதிமன்றம் வரையில் போய் மோதினார்கள். பன்னீர்செல்வம் தனது ஆதரவு வேட்பாளரை அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தார். உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்களால் தென்னரசு தேர்வு செய்யப்பட்டார். இதனால், பன்னீர்செல்வத்தின் வேட்பாளர் வாபஸ் பெற்றார். ஈரோடு கிழக்கில் தோற்றதன் மூலம் எட்டாவது தோல்வியைச் சந்தித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பொன் விழாவைக் கொண்டாடும் அ.தி.மு.க-வுக்கு தொடர்ச்சியாக எட்டு தோல்விகளைப் பெற்றுக் கொடுத்த பெருமை பழனிசாமியையே சேரும்.