தமிழில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் ரோஜா. ஆந்திராவை சேர்ந்த இவர், தமிழில் செம்பருத்தியில் தொடங்கிய இவரது திரைப்பயணம், அப்போதுள்ள முக்கிய முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடித்து வந்தார்.
தொடர்ந்து டிவி சீரியல்களிலும் நடித்து வந்த இவர், திரைப்படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் நடித்தார். இதனிடையே அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 2004, 2009-ல் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டார். அதில் தோற்ற இவர், அடுத்ததாக YSRCP கட்சியில் சேர்ந்த இவர் 2014 தேர்தலில் வெற்றி பெற்றார்.
அதன்பிறகு 2019-ல் நடைபெற்ற அம்மாநில தேர்தலில் YSRCP கட்சி வெற்றிபெற்று ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக ஆனார். அப்போது, முதல்வர் ஜென்மோகன் ரெட்டி இரண்டு ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என கூறினார். அதன்பேரில் கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டு ரோஜா உட்பட புதிதாக 25 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். அதில் நடிகை ரோஜாவுக்கு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை வழங்கப்பட்டது.
தற்போது அமைச்சராக தனது பணியை சிறப்பாக செய்து வரும் இவர், விளையாட்டுகளிலும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். அதனாலே கபடி, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளை துவக்கி வைக்கும்போது இவர் அதனை ஆசையுடனும், ஆர்வத்துடனும் விளையாடுவார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் அவ்வப்போது வெளியாகும். மேலும் திருவிழாக்களில் நடனமாடுவது தொடர்பான வீடியோவும் வெளியானது.
தன்னை வெற்றிபெற செய்த தொகுதி மக்களுக்கு தேவையானவையை அவர்களோடு இருந்து தெரிந்துகொள்ள முடியும் என்ற நோக்கதோடு, நகரி தொகுதியில் வீடு கட்டி குடியும் பெயர்ந்தார். இப்படி மக்களோடு மக்களாக பழகி அவர்களுக்கான நலத்திட்டங்களை வழங்கி நன்மதிப்பை பெற்று வரும் ரோஜா தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஆந்திராவில் உள்ள பாபட்லாா சூரியலங்கா என்ற கடற்கரையை அண்மையில் சுற்றுலா துறை அமைச்சர் என்ற முறையில் ரோஜா பார்வையிட சென்றார். அப்போது கடற்கரை மணலில் இறங்கி ஆர்வமாக நடக்க தொடங்கினார். இதனால் அவர் தனது செருப்பை அங்கே கழட்டி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அந்த செருப்பை சுற்றுலா துறை ஊழியரின் கையில் எடுத்து கொண்டு வந்துள்ளார்
இது தொடர்பான வீடியோ நேற்று வெளியாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாக்கியது. மேலும் இதுகுறித்து ஆந்திராவின் எதிர்க்கட்சியினர் கடும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். தொடர்ந்து இணையத்தில் வைரலான இந்த வீடியோவுக்கு இணையவாசிகளும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் செருப்பை கையில் வைத்திருந்த சுற்றுலா துறை ஊழியர் சிருத்யோகி சிவ நாகராஜு என்பவர் இதுகுறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், "அமைச்சர் ரோஜாவின் செருப்பை கையில் எடுக்க யாரும் சொல்லவில்லை. அதனை அவரும் எடுக்க சொல்லவில்லை; அவரது செருப்பு தண்ணீரில் அடித்துச் சென்றுவிடுமோ என நினைத்து அந்த செருப்பை எடுத்து வேறு பக்கம் நானே எடுத்து வைத்தேன்" என்றார்.
இவரது இந்த விளக்கம் தற்போது ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஆந்திராவில் அடுத்த ஆண்டு (2024) சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இதனை அரசியலாக்க நினைத்து பெரிதாக பேசுவதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.