உத்திரமேரூர் கல்வெட்டுகளைப் புகழ்ந்து பேசும் பிரதமர் மோடி ஜனநாயகத்தின் மீது கல்வீசித்தாக்குவது பொருத்தமல்ல என்று ‘தீக்கதிர்' நாளேடு தலையங்கத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து 31.01.2023 தேதிய ‘தீக்கதிர்’ நாளேடு தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது :
செய்தியாளர்களுக்கு பேட்டியளிப்பதையோ, நாடாளுமன்றத்தில் விவாதங்களுக்கு பதில ளிப்பதையோ தவிர்த்து வரும் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மனதின் குரல் என்ற பெயரில் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார்.
2023ஆம் ஆண்டின் முதல் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள உத்திரமேரூர் கல்வெட்டுகளை சுட்டிக்காட்டி உலகத்தையே வியக்கவைக்கும் வகையில் இந்த கல்வெட்டுகள் அமைந்துள்ளன என்றும், ஒரு சிறிய அரசியலமைப்புச் சட்டம் போல விளங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உத்திரமேரூரில் பல்வேறு காலகட்டங்களில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. அதில் இடம் பெற்றுள்ள குடவோலை தேர்தல் முறை குறித்து பலரும் சிலாகிப்பது உண்டு. பிராமணர்களுக்கு தானமாக அளிக்கப்பட்ட சதுர்வேதி மங்கலம் என்னும் ஊருக்கு நடைபெற்ற தேர்தல் குறித்தே அந்த குறிப்பிட்ட கல்வெட்டில் உள்ளது. குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த குடும்பங்கள் மற்றும் சொந்த நிலம் வைத்திருப்பவர்கள் மட்டுமே குடவோலை முறையில் பல்வேறு வாரியங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இப்போதுள்ள மக்களாட்சி முறை என்பது சாதி, வர்க்க வித்தியாசமின்றி அனைத்து பகுதியினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கக்கூடிய ஒன்று. இந்த முறையை சீரழிக்கக்கூடிய வேலையைச் செய்து கொண்டிருக்கக்கூடிய பிரதமர் மோடி, மனுநீதி அடிப்படையிலான தேர்தல் முறையை சிறிய அரசியல் சாசனம் என்று வியந்துரைப்பது இயல்பான ஒன்றல்ல.
இந்தியாவின் மிகப் பெரிய, மதச்சார்பற்ற அரசியல் சாசனத்தை மனுநீதி அடிப்படையில் மாற்ற முயல்பவரின் உள்ளக்கிடக்கையாகவே இதைக் கொள்ள முடியும். இதே உரையில். ‘இந்தியா - ஜனநாயகத்தின் தாய்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட புத்தகத்தை மேற்கோள்காட்டி ஜனநாயகம் நம் நாடி நரம்புகளில் கலந்திருக்கிறது என்று பெருமிதம் பொங்க குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி. அந்த நாடி நரம்புகளை அறுத்தெறியும் வகையில்தான் இவரது அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
பிரதமர் கூறுவது உண்மையானால், செவ்வாயன்று துவங்கவுள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரை முற்றிலும் ஜனநாயக முறையில் நடத்த இவரது அரசு முன்வரவேண்டும். மாறாக நாடாளுமன்ற ஜனநாயகத்தையே முடக்கும் வகையில்தான் இவரது அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
விவாதம் இல்லாமலேயே முக்கியச் சட்டங்களை நிறைவேற்றுவது, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பது, நாடாளுமன்றத்திற்கு வெளியே பல்வேறு முடிவுகளை அரசாணை மூலமாக செயல்படுத்துவது போன்ற பாஜக அரசின் நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு வலுவூட்டாது. உத்திரமேரூர் கல்வெட்டுகளைப் புகழ்ந்து பேசிவிட்டு ஜனநாயகத்தின் மீது கல்வீசித்தாக்குவது பொருத்தமல்ல.