தந்தை பெரியாரின் 49-வது நினைவு தினம் மாநிலம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கும், திருவுருவப்படத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சி திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள பெரியாரின் சிலைக்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சேது சமுத்திர திட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றவேண்டும் என வலியறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தந்தை பெரியார் ஒரு பேராயுதம். மதவெறி, சாதிவெறி, பதவிவெறி போன்றவற்றையெல்லாம் தீர்க்ககூடிய பேராயுதமாக இளைஞர்களின் கையில் இருக்கிறார். அதன் விளைவாக உடலால் வாழ்ந்த காலத்தைவிட உணர்வால் நிறைந்த காலமாக இந்த காலம் உள்ளது. எதிரிகள் கூட பெரியாரை கண்டு இன்னும் பயப்படுகிறார்கள். பெரியாரின் சிலையை கண்டு அஞ்சக்கூடிய நிலையில் உள்ளனர்" என்றார்.
தொடர்ந்து ராமர் பாலம் குறித்து பேசிய அவர், "தென் மாவட்ட மக்கள் பயன்பெறக்கூடிய மாபெரும் திட்டம் சேதுசமுத்திர கால்வாய் திட்டம். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் தென் மாவட்டத்தில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். தென் தமிழகம் மிகப்பெரிய அளவிற்கு பயன்பெற்றிருக்கும். மதுரையில் இத்திட்டத்திற்கான தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. ரூ.2000 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டது.
வேண்டுமென்றே ஒருசிலர் ராமர் பாலம் இருப்பதாக கூறி இத்திட்டத்தை நிறுத்தினர். எனவே இதுவரை இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. தற்போது ராமர் பாலம் இருந்ததற்கான ஆதாரம் இல்லையென்று ஒன்றிய அமைச்சரே தெரிவித்துவிட்டார். எனவே சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை ஒன்றிய அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு பயன் தரக்கூடிய இந்த சேதுசமுத்திர கால்வாய் திட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக்கட்சிகளும் ஓர் அணியில் திரளவேண்டும். சேது சமுத்திர கால்வாய்திட்டதை உடனடியாக தொடங்க வலியுறுத்தி திராவிட கழகம் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளது" என்றார்.