ஒன்றிய பா.ஜ.க அரசு மத்தியில் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்தே சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் தலித் மக்களுக்கு எதிரான நடவடிக்கையை தொடர்ச்சியாக செய்து வருகிறது.
குறிப்பாக சிறுபான்மையினர் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த கல்வி உதவித்தொகையை நிறுத்தும் நடவடிகையில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபடியாக, 2022-2023ஆம் ஆண்டு முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு திடீரென ரத்து செய்தது.
ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகையை நிறுத்தியிருப்பது ஜனநாயக விரோதமானது என தி.மு.கவின் மாணவர் அணித் தலைவர் ராஜீவ் காந்தி விமர்சித்துள்ளார்.
இது குறித்து ராஜீவ் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சுதந்திரப் போராட்ட வீரர்,காந்தியின் நண்பர் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மவுலானா அபுல்கலாம் ஆசாத் பெயரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மதச் சிறுபான்மையின மாணவர்களின் மேற்படிப்புக்காக வழங்கப்பட்டு வரும் ப்ரீ மெட்ரிக் உதவித்தொகையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது ஒன்றிய பாஜக அரசு.
மதத்தின் பெயரால் ஜனநாயகப் படுகொலை செய்யும் மோடி அரசின் மற்றுமொரு வஞ்சகச் செயலே இந்த முடிவு.இந்தத் திட்டம், 2006ம் ஆண்டு ஆய்வுக்குட்படுத்தி, 2009ம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இதுநாள் வரை இந்தத் திட்டத்தில் பல ஆயிரமான மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள்.
2013ல் குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது இந்தத் திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தார். உடனடியாகத் தலையிட்ட உச்சநீதிமன்றம் கல்விக்காக வழங்கப்படும் உதவித்தொகை. அதை எக்காரணம்கொண்டும் நிறுத்தக் கூடாது எனக் குட்டு வைத்தது.
ஆனால்,அதையெல்லாம் மீறி மீண்டும் மத சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலைத் தொடுத்திருக்கிறது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்காக வாதிடுகிறோம் எனச் சொல்லிக்கொண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகையை நிறுத்தியிருப்பது ஜனநாயக விரோதமானது
“ஜனநாயகம் என்பது பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையிலான ஆட்சி மட்டுமல்ல; சிறுபான்மையினரின் உரிமைகள்,உணர்ச்சிகள் ஏற்று, போற்றிப் பாதுகாத்துச் செயல்படுவது தான்” என்பார் பேரறிஞர் அண்ணா.
இதைப் புரிந்துகொண்டு ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயலைக் கைவிட்டுவிட்டு, நிறுத்தப்படுவதாக அறிவித்த மவுலானா அபுல் கலாம் ஆசாத் கல்வி உதவித் தொகை மீண்டும் வழங்குவதை ஒன்றிய பாஜக அரசு உறுதி செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.