குஜராத் மாநில தேர்தல் வெற்றியைக் கொண்டாடி குதூகலித்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க.! ஏதோ எதிர்பாராத வெற்றியை பெற்று விட்டதுபோல ஏடுகள் எல்லாம் எக்காளமிட்டு பி.ஜே.பி.யின் வெற்றி யை புகழ்ந்து தள்ளுகின்றன. ஊடகங்கள் பெரும்பாலும் பி.ஜே.பியின் ஊதுகுழலாக மாறி ராகாலா பனம் செய்து, பல கோணங்களில் இந்த வெற்றியை தூக்கிப்பிடித்து உச்சஸ்தாதியில் இசைத்து மகிழ்கின்றன.
இந்த வெற்றி இப்படி வெறித்தன மாகக் கொண்டாடப்பட வேண்டிய வெற்றி இல்லை என்பதை பி.ஜே.பி.யினரே உணருவர்! இந்த வெற்றி குஜராத் மக்கள் தாங்களாகவே முன்வந்து பி.ஜே.பி.க்கு தந்த வெற்றி அல்ல; இது மக்களை ஏமாற்றி, பல சூதுவாதுகளை நடத்தி, ஜனநாயக நெறிமுறைகளைத் தகர்த்து தட்டிப்பறிக்கப்பட்ட வெற்றி என்பதை இந்தத் தேர்தலுக்கு முன்னும், பின்னும் நடந்தவைகளை கூர்ந்து கவனித்த அரசியல் நோக்கர்கள் அறிவர்!
ஒரு மாநிலத் தேர்தலை நாட்டின் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஈடுபட்டு – பல நாட்கள் அங்கேயே சுற்றிச் சுழன்று தங்களது நேரடிக் கண்காணிப்பில் நடத்தியுள்ளனர்!. உலக மகா பத்து பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் அதானிக்கும், அம்பானிக்கும் சொந்த மாநிலம் அது! உலகத்தின் இரண்டாவது பெரிய பணக்காரர் கெளதம் அதானி. அந்த இடத்தை பி.ஜே.பி.யின் கடாட்சத்தால் பெற்றவர் என்பதை உலகே அறியும்! நன்றிக்கடன் செலுத்த அவர் அங்கு கிடைத்த வழியெல்லாம் புகுந்து அரும்பாடுபட்டிருப்பார்.
இந்தியாவின் பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் அவர்களது ரத கஜ துரக பதாதிகள் அனைத்தும் முன்னணியிலும், உலக மகாப் பணக்காரர்கள் அதானி, அம்பானி போன்றோர் பின்னணியிலும் இருந்து நடத்தி முடித்த தேர்தல். அதைவிட இந்தக் கூட்டணியில் தேர்தல் கமிஷனும் இணைந்து செயல்பட்டதையும் மறுத்திட இயலாது. பட்டேல் சமூகத்தைச் சேர்ந்த ஹர்த்திக் பட்டேல் தேர்தலுக்கு முன் பா.ஜ.கா.வில் சேர்க்கப்பட்டார். இவர் கடந்த தேர்தலின்போது காங்கிரசில் சேர்ந்து தேர்தல்களத்தை சந்தித்தவர். பட்டேல் சமூகத்தை சேர்ந்தவர்.
அந்த மக்களுக்கு இடஒதுக்கீடுக்காக குஜராத் மாநிலத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தியவர். அந்த இனமக்களிடம் செல்வாக்குமிக்கவர். இவர் மீது ஒரு கட்டத்தில் குஜராத்தின் பா.ஜ.க. அரசு தேசத்துரோக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது. ஒன்றல்ல; இவர் மீது இரண்டு தேசத்துரோக வழக்குகளை பா.ஜ.க. அரசு போட்டுள்ளது! ஏறத்தாழ இந்த வழக்குகளால் 9 மாதம் சிறையில் இருந்த ஹர்திக் பட்டேல் – 6 மாத காலம் குஜராத் மாநிலத்துக்குள் வரக்கூடாது என்ற நிபந்தனையுடன் குஜராத் உயர் நீதிமன்றத்தால் ஜாமின் வழங்கப்பட்டு வெளியில் வந்தவர் என்பதெல்லாம் வரலாறு!
தேசத்துரோக வழக்குகளில் சிக்கிய ஹர்திக் பட்டேல், திடீரென காங்கிரசில் இருந்தபோதே பி.ஜே.பி.யை புகழத் தொடங்கினார்.2022 மே மாதம் அவர் மீது தொடுக்கப்பட்டிருந்த கிரிமினல் வழக்குகளை குஜராத் பி.ஜே.பி. அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது. தேசத் துரோகி என முத்திரை குத்தப்பட்டு வழக்குகளை சந்தித்த ஹர்திக் படேலுக்கு ‘‘கங்கா ஸ்நானம்’’ செய்து அவரை தேசப்பக்தராக்கி விட்டனர்! அவரும் பி.ஜே.பி.யில் இணைந்து விட்டார்!
தில்லு முல்லு தில்லு முல்லு
உள்ளமெல்லாம் கல்லு முள்ளு
ஆயிரம் நாடகம்;
ஆயிரம் வேஷங்கள்...
வெட்கமில்லை, துக்கமில்லை...
என்ற திரைப்படப் பாடல் வரிகளுக்கு உயிரோட்டம் தரும் வகையில் பல நாடகங்களை வெட்கமின்றி நடத்தி தட்டிப் பறித்த வெற்றிதான் குஜராத் வெற்றி!
இத்தகைய இழிதகை நாடகங்கள் பழி பாவத்துக்கஞ்சா படுபாதகச் செயல்கள் நடத்தி பி.ஜே.பி. பெற்ற வெற்றியை, ஏதோ இமயத்தையே பேர்த்தெடுத்து தலையில் மோடி தாங்கியுள்ளது போல ‘Land Slide Victory’ ‘bulldozed Victory’ அதாவது எதிரிகளை சரியச் செய்து தரைமட்டமாகத் தகர்த்திட்ட வெற்றி என்றெல்லாம் ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள் வருணித்தன!ஊடகங்கள் எந்த அளவில் பி.ஜே.பி.யின் கட்டுப்பாட்டுக்குள் முடங்கிப் போயுள்ளன என்பதற்கு நடந்து முடிந்த இரு மாநில இடைத்தேர்தல்கள் முடிவு குறித்தும், டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவு பற்றியும் அவை வெளியிட்ட செய்திகள் மூலமே அறியலாம்!
டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் முதல் நாள் வெளி வந்தன! தலைநகர் டெல்லியின் ஆட்சி ‘ஆம் ஆத்மி’யிடம் இருந்தாலும் அங்குள்ள காவல் துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இயங்குகிறது; தலைநகர் டெல்லி, இந்தியாவின் நாடாளுமன்றம், இந்தியாவின் குடியரசுத் தலைவர் இந்தியாவை ஆட்சி புரியும் பிரதமர், அவருக்கு உறுதுணையாக இருக்கும் அமித்ஷா போன்ற அமைச்சர்கள் வசிக்கும் இடம். இந்த மாநகராட்சி தேர்தல் என்பது டெல்லி சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலைப் போன்றது! டெல்லியில் இந்த தேர்தலுக்கு முன், வடடெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன், தென்டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன், கிழக்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் என மூன்று மாநகராட்சிகள் இருந்தன!
இந்த மூன்றையும் பி.ஜே.பி. கைப்பற்றி ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தது. இந்த மூன்று மாநகராட்சிகளும், ஒன்றிய அரசின் ஒப்புதலோடு ஒன்றிணைக்கப்பட்டு, டில்லியின் ஒன்றிணைந்த கார்ப்பரேஷனாக மாற்றப்பட்டது! அந்த ஒன்றிணைந்த மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தல் என்பது – ஏறத்தாழ ஒரு மாநிலத் தேர்தலை ஒத்தது! அந்த தேர்தலில், ஆம் ஆத்மி, அதுவரை மூன்று கார்ப்பரேஷன்களையும் ஆட்சி செய்து வந்த பி.ஜே.பி.யை வீழ்த்தி வெற்றி கண்டது!
ஆம் ஆத்மி அங்கு பெற்ற வெற்றி குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றல்ல; ஒன்றியத்தை ஆளும் கட்சியான பி.ஜே.பி. சாம்ராஜ்யம் நடத்திய மூன்று கார்ப்பரேஷன்களையும் தகர்த்து ஆம் ஆத்மி கண்ட வெற்றி! அந்த மாபெரும் வெற்றியை, பி.ஜே.பி.க்கு பயந்து அல்லது பணிந்து அடக்கி வாசித்த ஊடகங்கள், குஜராத்தில் பி.ஜே.பி. தக்க வைத்துக் கொண்ட வெற்றியை ஊதிப் பெரிது படுத்தி வருகின்றன!
அதேபோல இமாச்சலப் பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி.யை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி ஈட்டியுள்ளது; காங்கிரஸ் அங்கு பெற்ற வெற்றி குறைத்து மதிப்பிட முடியாத வெற்றி! ஆளும் கட்சியாக இருந்த பி.ஜே.பி.யை தகர்த்து கண்ட வெற்றி அந்த வெற்றியை இருட்டடிட்பு செய்து, கைவசம் இருந்த ஆட்சியை படாதபாடுபட்டு, தேர்தல் கமிஷன் முதல் மற்ற அத்தனை அரசு சாதனங்களை, தவறாகப் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகங்கள், அத்து மீறி செய்து
உலகமகா பணக்காரர்கள் அதானி, அம்பானி போன்றோர் அருட்கடாட்சத்தோடு சந்தித்து தில்லுமுல்லுகள் பல நடத்தி, தக்க வைத்துக் கொண்ட ஒரு வெற்றிக்கு விளம்பர வெளிச்சம் தரும் வகையில் ஊடகங்கள் ஒன்றிய அரசின் ஊது குழலாகிவிட்டன! என்.டி.டிவி போன்ற ஊடகங்கள் சில நேரங்களில் உண்மை நிலையை வெளிக் கொணர்ந்து வந்த நிலையில், அதனையும் அதானி மூலம் கபளீகரம் செய்துவிட்டனர்.குஜராத் வெற்றிக்கு ‘TSUNAMO Decimates Congress in Gujarat’ எனத் தலைப்பிட்ட என்.டி.டிவி, ராஜஸ்தானில் காங்கிரஸ் பெற்ற வெற்றிக்கு “Congress Wrests back Himachal” என்று குறிப்பிட்டதிலிருந்தே ஊடகங்கள் எப்படி செயல்படத் தொடங்கிவிட்டன, அல்லது செயல்பட வேண்டுமென்று பணிக்கப்பட்டதற்கு பணிந்து நடுங்கி செயல்படுகின்றன என்பதை தெளிவாக்குகின்றன!
வடஇந்திய ஊடகங்கள் மட்டுமல்ல; நமது தமிழ்நாட்டின் ஊடகங்கள் சிலவும், அப்படித்தான் செய்திகள் வெளியிட்டு ஒன்றிய அரசின் கடைக்கண் பார்வைக்காக காலை கழுவி நின்றன! தமிழகத்திலிருந்து வரும் ஒரு செய்தி தொலைக்காட்சி, குஜராத் வெற்றியை சுட்டிக்காட்டி, “குஜராத் வெற்றி 2024 தேர்தலில் மோடி அலைதானா என ‘ஸ்குரோல்’ விட்டது; அதே நேரத்தில் கடந்த முறை ஆட்சியிலிருந்த பா.ஜ.க.வை வீழ்த்தி இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் பெற்ற வெற்றியை, “மீண்டும் ஹிமாச்சலில் ஆட்சியை பிடித்தது காங்” என்று தலைப்பிட்டு தங்களது ‘சகுனி’ வேலைகளை காட்டியுள்ளது!
இத்தனைக்கும் அந்த ‘நம்மூர்’ தொலைக்காட்சி நிறுவனம் ‘சங்கி’ களின் கட்டுப்பாட்டில் இயங்குவது அல்ல; ஆனால் ‘சங்கி குஞ்சுகள்’ அங்கே புகுந்து கொண்டு நடத்திடும் ‘சாணக்ய’ வேலைகள் அவை!நாட்டு மக்கள் விழிக்கத் தொடங்கிவிட்டனர்! ஏமாற்றுப் பேர்வழிகளின் எத்து வேலைகளை உணரத் தொடங்கி விட்டனர். அதன் விளைவே பாரதிய ஜனதா, சந்திக்கத் தொடங்கியிருக்கும் தோல்விகள்! இமாச்சலபிரதேசம் மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் பெற்ற தோல்விகள்!
புண் புறையோடிக் கொண்டிருக்கிறது; ஊடகங்களை மிரட்டி அந்தப் புண்ணுக்கு புணுகு தடவிடும் வேளைகளில் ஈடுபடாதீர்கள்! மக்கள் விழிக்கத் தொடங்கி விட்டனர். பச்சைப் பாம்பை பச்சைக் கொடியாகக் காட்டி அவர்களை ஏமாற்றும் வேலைக்கு முற்றுப் புள்ளி வையுங்கள். ஆட்சி பீடத்தில் ஏறி ஆடிய ஆட்டங்கள் இனி எடுபடாது; ஏனென்றால் பீடமே ஆடத் தொடங்கிவிட்டது. நடந்து முடிந்த தேர்தல்களின் முடிவுகள் தெளிவாக்கும் உண்மை இதுதான்