இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்தே தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் இந்தியாவில் வரலாறு காணாதவகையில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை எட்டியுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.90க்கு மேல் விற்பனையாகிறது. இந்த வரலாறு காணாத விலை ஏற்றத்தால் சமான்ய மக்கள் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
இது தவிர சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தால் மறைமுகமாகப் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது இன்னும் மோசமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் மோடி தலைமையிலான பாஜக அரசு பெட்ரோல் -டீசல் விலையை குறைக்காமல் இருந்து வருகிறது. அதே நேரம் குறைந்த கச்சா எண்ணெய் விலை சிறிது உயர்ந்தாலும் பெட்ரோல் -டீசல் விலையை உயர்த்தி மக்களை வாட்டி வருகிறது. பொருளாதார பிரச்சனையில் சிக்கித்திணறும் இலங்கையில் கூட இந்தியாவை விட பெட்ரோல்-டீசல் விலை குறைந்தே இருந்து வருகிறது.
இந்த நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். தனது ட்விட்டர் பதிவில், "கடந்த 6 மாதங்களில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 25 % குறைந்துள்ளது. எல்.பி.ஜி விலை 40% குறைந்துள்ளது. ஆனால் இன்னும் இந்தியாவில் பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு விலை குறைக்கப்படாதது ஏன்? உங்கள் கொள்ளைத் திட்டத்துக்கு எதிரான ஜனநாயக குரலின் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் பிரதமரே ? " என ஆவேசமாக கேள்வியெழுப்பியுள்ளார்.