மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சம்பாஜி பிடே. சமூக செயற்பாட்டாளரான இவர் ஸ்ரீ விஷ்பிரதிஷ்தான் ஹிந்துஸ்தான் என்ற அமைப்பின் நிறுவனத் தலைவராவார். இவர் அண்மையில் அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பிற்குப் பிறகு அவரிடம் பெண் பத்திரிகையாளர் ஒருவர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்ததற்கான காரணம் குறித்து கேள்வி கேட்டார். இதற்கு சம்பாஜி பிடே, 'நெத்தியில் பொட்டு வைக்காத பெண்களிடம் நான் பேச மாட்டேன். பெண்கள் விதவை போல தோற்றமளிக்காமல் இருக்க பொட்டு வைக்க வேண்டும்.
பெண்கள் பாரத மாதா போன்றவர்கள். நீங்கள் என்னிடம் பேச வேண்டும் என்றால் முதலில் பொட்டு வைக்க வேண்டும்" என கூறிவிட்டு அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பத்திரிகையாளர் பலரும் சம்பாஜி பிடேவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ரூபாலி சகங்கர், இது தொடர்பாக விளக்கம் கேட்டு சம்பாஜி பிடேவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதேபோல் 'பொட்டு அணிவது அல்லது அணியாமல் இருப்பது அவரவர் தனிப்பட்ட சுதந்திரம்' என அந்த பெண் பத்திரிகையாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
யார் இந்த சம்பாஜி பிடே ?
2014ம் ஆண்டு குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியை சாங்கிலி மடத்தில் சந்தித்தபோது தான் சம்பாஜி பிடே மீது ஊடக வெளிச்சம் பட்டது. மேலும் 2018ம் ஆண்டு தனது பழத்தோட்டத்தில் உள்ள மாம்பழங்களைச் சாப்பிட்டால் ஆண் குழந்தைகள் பிறக்கும் என பேசி சர்ச்சையில் சிக்கினார்.
மேலும், இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முழு நேர ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். பிறகு ஸ்ரீ ஷிவ்பிரதிஷ்தான் ஹிந்துஸ்தான் என்ற அமைப்பை நிறுவினார். தற்போது சமூக செயற்பாட்டாளராக 80 வயதாகும் சம்பாஜி பிடே வளம் வந்து கொண்டிருக்கிறார்.