கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடி விபத்து தொடர்பாக நேற்று கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கோவை சம்பவத்தில் காவல்துறை மிகத் திறமையாகச் செயல்பட்டுள்ளது. பதற்றமான நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து மக்கள் நிம்மதியாக வாழ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக விரைவாகச் செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால் இந்த பிரச்சனையில் பா.ஜ.கவினர் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள்" என தெரிவித்திருந்தார். மேலும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஓர் அரசியல் கோமாளி என்றும் விமர்சித்திருந்தார்.
இதையடுத்து கோவையில் நடந்த சம்பவத்தைப் பற்றி செய்தியாளர்களிடம் கூறி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு என்ன சம்பந்தம் உள்ளது என கேள்வி எழுப்பி பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இவரின் இந்த அறிக்கைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " எனக்கும் கோவை சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம் என்று அரசியல் கோமாளி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டப்படி அமைச்சராகப் பொறுப்பேற்று முதலமைச்சர் அவர்களால் கோவை மாவட்டத்திற்குப் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளேன்.
முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி நிலைமையை ஆய்ந்து, ஊடகத்தைச் சந்தித்து விளக்கினேன். மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒத்த ஓட்டு ஓட்டைவாய் எதையாவது உளறிக் கொட்டி ஊடக வெளிச்சத்திலேயே காய்ந்து கொண்டிருக்கிறது. சுயபுத்தியும் இல்லை; சொன்னாலும் புரிவதில்லை." என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அமைச்சரின் இந்த ட்விட்டடர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை இணையவாசிகள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.