மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்களை தங்கள் கட்சியில் இழுத்து வருகிறது. எதிர்கட்சிகளை மட்டுமின்றி கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்களையும் தங்கள் கட்சியில் சேர்ந்து வருகிறது. இதன் மூலம் பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்தும் இருக்கிறது.
தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ-க்களை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க முயல்வதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், தெலுங்கானாவில் நடைபெற்ற அதேபோன்ற முயற்சியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெலங்கானாவின் ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் பைலட் ரோஹித் ரெட்டி, காந்தாராவ், பாலாராஜு, பீராம் ஹர்ஸ்வர்தன் ஆகிய 4 பேரை விலைக்கு வாங்க சிலர் பேரம் பேசியுள்ளனர்.
பின்னர் இது குறித்த பேச்சு வாரத்தையை ஒரு பண்ணை வீட்டில் வைத்து நடத்தியபோது ஒரு எம்.எல்.ஏ இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார். அதன்படி பேச்சுவார்த்தை நடந்தபோது அங்கு வந்த போலிஸார் 3 பேர் கொண்ட அந்த கும்பலை கைதுசெய்தது. இந்த சம்பவம் வெளிவந்த நிலையில், இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலிஸார் விசாரணையில் 4 எம்.எல்.ஏ-க்களில் ஒருவருக்கு 100 கோடியும் மற்றவர்களுக்கு தலா 50 கோடி தருவதாக பேரம் பேசப்பட்டுள்ளது. மேலும், கான்ட்ராக்ட் , கட்சியில் முக்கிய பதவி கொடுப்பதாகவும் ஆசை வார்த்தை காட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 4 எம்.எல்.ஏக்களும் முதல்வர் சந்திரசேகர ராவிடம் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
முன்னதாக பா.ஜ.க தலைவர் ஒருவர் விரைவில் பாரத் ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் பா.ஜ.க-வில் சேருவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், இந்த சம்பவத்தின் பின்னால் பாஜக இருப்பதாக சமூகவலைத்தளத்தில் பலர் விமர்சித்து வருகின்றனர்.