தமிழ்நாட்டில் 2017 அக்டோபர் 6 முதல் 2021 செப்டம்பர் 17ம் தேதி வரை 14 வது ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவியில் இருந்தார். அப்போது ஆட்சியில் அ.தி.மு.க இருந்தது. மேலும் இவர்கள் கூட்டணிக் கட்சியாக பா.ஜ.கவும் இருந்தது.
இதை பயன்படுத்திக் கொண்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அரசின் விவகாரங்களில் தலையிட்டு வந்தார். மேலும் அரசின் திட்டப் பணிகளை ஆய்வு செய்ய மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தபோது அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தது.
மேலும் ஆளுநர் தன்வரம்பை மீறி செயல்படக்கூடாது. அது ஆளுநர் பதவிக்கு அழுகள்ள என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை எழுப்பினர். அதேபோல் அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற அனைத்து முறைகேடுகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பவராகவே ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இருந்துவந்தார்.
இதையடுத்து தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது பஞ்சாபில் நடைபெற்று வரும் ஆம் ஆத்மி ஆட்சியின் உள்விவகாரங்களின் தலையிட்டு அங்கும் தனது வரம்பை மீறிச் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்த நான்கு ஆண்டுகள் மிகவும் மோசமாக இருந்தது என பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், "தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்த 4 ஆண்டுகள் மிகவும் மோசமாக இருந்தது. அங்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி ரூ.40 முதல் ரூ.50 கோடிக்கு விற்கப்பட்டது.
தமிழ்நாட்டில் சட்டப்படி பல்கலைக்கழகங்களுக்கு 27 துணைவேந்தர்களை நியமித்துள்ளேன். எனேவ இந்த பணிகளை எப்படிச் செய்ய வேண்டும் என பஞ்சாப் அரசு என்னிடம் கற்றுக்கொள்ள வேண்டும். பஞ்சாபில் யார் தகுதியானவர் என்றெல்லாம் தெரியாது. கல்வித் தரம் உயரவேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம்" என தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க ஆட்சியின் போது தமிழ்நாட்டு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித்தின் இந்த குற்றச்சாட்டு தற்போது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமியின் ஊழலை அம்பலப்படுத்தும் விதமாகவும் ஆளுநரின் இந்த குற்றச்சாட்டு அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.