பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளை தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.இது தவிர ஒன்றிய அரசின் அலுவலங்களில் இந்தியை பயன்படுத்த சொல்வது, அலுவல் பூர்வ கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
சில தினங்களுக்கு முன்னர் பணியாளர் தேர்வாணையத்தால், ஒன்றிய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் CGL தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. இதற்கு திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக ஹிந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
மேலும், கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக கட்டாயம் இந்தி இடம்பெறவேண்டும்.கல்லூரிகளில் ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை கொண்டு வர வேண்டும்.போட்டி தேர்வுகளில் கட்டாய ஆங்கில மொழி வினாத்தாள்கள் நிறுத்தப்பட வேண்டும். போட்டி தேர்வுகளில் இந்தியை கட்டாய மொழியாக்க வேண்டும்.இந்தியில் பணிபுரியாத அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எச்சரிக்கப்பட வேண்டும்.ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வில் தேர்வாளர்கள் இந்தி அறிவை உறுதி செய்ய வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி இருக்க வேண்டும். அரசியல் சாசன தேவை ஏற்பட்ட்டால் மட்டுமே ஆங்கில மொழி பெயர்ப்பை பயன்படுத்த வேண்டும். விளம்பரங்கள் அனைத்தும் இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் இடம்பெற வேண்டும். ஆங்கில விளம்பரங்கள் சிறியதாகத்தான் இருக்க வேண்டும். ஒன்றிய அரசின் அலுவலகங்கள் அனைத்திலும், அமைச்சரவை இலாகாக்கள் அனைத்திலும் கடிதங்கள், பேக்ஸ்கள், இ மெயில்கள் இந்தியில்தான் இருக்க வேண்டும். அலுவலக பயன்பாட்டுக்கு எளிதான இந்தி பயன்படுத்த வேண்டும். ஒன்றிய அரசால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள், உரைகள் அனைத்தும் இந்தியில் இருக்க வேண்டும் போன்ற பல்வேறு பரிந்துரைகளும் அதில் இடம்பெற்றுள்ளது. ஒன்றிய அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கேரள முதல்வர் பிரனாயி விஜயனும் ஒன்றிய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இளம் தலைமுறையினர் தங்கள் தாய் மொழியைத் தவிர வேறொரு மொழியைக் கற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றாலும், ஏதாவது ஒரு மொழியைத் திணிப்பது போன்ற உணர்வு லேசாக ஏற்பட்டாலும்கூட பொதுமக்களிடமும் வேலை வாய்ப்புத் தேடுவோரிடமும் சந்தேகங்களை எழுப்பும். தேவையான சரிசெய்யும் நடவடிக்கைகளை எடுக்க பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும்
இந்தியாவில் பல மொழிகள் இருக்கின்றன. எந்த ஒரு மொழியையும் இதுதான் நாட்டின் மொழி என்று கூற முடியாது.அரசுத் துறையில் நம்முடைய இளைஞர்களுககு மிகக் குறைவான வேலைவாய்ப்புகளே இருக்கின்றன. அதிலும் ஒரு பிரிவினரை மொழி காரணமாக தள்ளிவைப்பது இந்த சமூகத்திற்கு நன்மை பயக்காது" என கூறியுள்ளார்.