ஒரு தொலைக்காட்சி நடத்திய ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன். தமிழுக்கு ஊக்கம் தாருங்கள்; அதே நேரத்தில் இந்திக்கு இழுக்குத் தேடாதீர்கள். தனி நபர்கள் கற்கும் உரிமைக்குத் தடை விதிக்காதீர்கள். இந்தி கற்றிடும் மாணவர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று பேசிவிட்டு, தான் படித்த காலத்தில் யாராவது இந்தியையோ, சமஸ்கிருதத்தையோ கற்றிட விரும்பினால், எல்லா பகுதிகளிலிருந்தும் அதற்கு விமர்சனம் எழுந்தது என்றும் தான் சொல்வது தனது அனுபவத்தில் எழுந்த உண்மை என்று கூறியுள்ளார்! இன்றும்கூட இந்தி மற்றும் சமஸ் கிருதத்தில் படித்து முதல் மாணவர் களாக வருபவர்களுக்கு சலுகைகள் மறுக்கப்படுவதாகக் கவலைப்பட் டுள்ளார்! இந்த ஆதங்கம் எதனால் திருமதி. நிர்மலா சீத்தாராமனுக்கு ஏற்பட்டுள் ளது என்பதற்கான காரணம் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது! “ஹிந்தி விவேக்" எனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிர்மலா சீத்தாராமனை, இந்தியில் பேசுமாறு வேண்டுகோள் விடுத்தபோது, இந்தியில் பேசுவதற்கு தனக்கு நடுக்கம் ஏற்படுவதாகக் கூறி, சங்கோ ஜத்துடன்தான் இந்தியில் பேசுவதாக வருந்தியுள்ளார்! இந்தியாவிலுள்ள ஒரு மாநிலத்துக்குச் சென்ற ஒரு தமிழ்நாட்டுப் பெண்மணி, தன்னால் இந்தியில் சரளமாகப் பேச முடியாமல் போனதற்காக கூனிக் கூசியுள்ளார்!
ஆனால் தமிழ்நாட்டுக்கோ அல்லது தெலுங்கானாவுக்கோ, ஆந்திரப் பிரதேசத்துக்கோ, கேரளத்துக்கோ, கருநாடகத்துக்கோ வரும் பிரதமர் மோடியோ, அமித்ஷாவோ; மற்ற மற்ற வட இந்தியத் தலைவர்களோ தாங்கள் அந்த மாநில மொழியில் பேச முடியாத தற்கு எப்போதாவது சங்கோஜப்பட்டிருக்கிறார்களா? திருமதி நிர்மலா சீத்தாராமனாவது இந்தி பேசும் மாநிலங்களில் சரளமாக இல்லாவிடிலும், கேட்கின்ற மக்களுக்குப் புரியும் வகையில் இந்தியில் பேசுகிறார்! அவரால் பேச முடியும்! தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடியோ, அமித்ஷாவோ, நட்டாவோ வேறு எந்த அகில இந்தியத் தலைவர்களோ, தமிழில் பேச முடிவதில்லையே என வருந்தியதுண்டா? தமிழக முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் மேற்கு வங்கத்துக்குச் சென்றபோது அவர்களது வங்காள மொழியில் பேசினார்; கேரளத்துக்குச் சென்றபோது மலையாளத்தில் சிறிது நேரம் பேசினார்! அந்த மொழிகளில் சரளமாகப் பேச இயலாவிடினும் முடிந்த அளவு அந்த மாநில மக்களின் தாய்மொழியில் பேசி அவர்கட்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினார். அவர்களது தாய்மொழியில் சரளமாகப் பேச முடியவில்லையே என அதற்காக சங்கோஜப்படவில்லை!
தமிழினத் தலைவர் கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு வந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தமிழிலேயே பேசினார்; அவர் பேசிய தமிழ் சரளமானது அல்ல; இருந்தும் தமிழக மக்கள் ஆரவாரத்துடன் கையொலி எழுப்பி அவரது பேச்சை வரவேற்றனர்! தான் தமிழை நன்கு அறிந்து பேசவில்லையே என்று அவர் கவலைப்படவில்லை ! பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்து பேசும்போது தமிழ்மக்கள் உள்ளங்களை ஆட்கொள்ள வேண்டும் என நினைத்து, பல நேரங்களில் திருக்குறளை, பாரதியின் கவிதைகளைக் கூறுகிறார். அவர் பேசுவது தமிழா என்று கேள்வி எழுப்பாமல், அவர் தமிழிலே பேச வேண்டும் என்று நினைத்திடும் அவரது ஆர்வத்தைப் பாராட்டி தமிழ் மக்கள் மகிழவில்லையா?
இந்தியில் சரளமாகப் பேச முடியாமல் போனதற்கு ஏன் அம்மையார் சங்கோஜப்பட வேண்டும் என்பது புரியவில்லை ! ஒரு வேளை, இந்தி வெறியர்களின் கூடாரமான பாரதிய ஜனதா கூட்டம், அவருக்கு இந்தியில் சரளமாகப் பேசத் தெரியவில்லை என்பதற்காக பதவியைப் பறித்துவிடக் கூடாது என்பதற்காக இப்படி ஆதங்கப்பட்டுள்ளாரோ என்னவோ தெரியவில்லை! தான் கல்லூரியில் படித்த காலத்தில் இந்திக்கு எதிராக ஒரு வன்முறை கலந்த எதிர்ப்பு தமிழகத்தில் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். திருமதி நிர்மலா சீத்தாராமன் பாரதிய ஜனதா கட்சியில் ஓரளவு பண்பட்ட அரசியல்வாதி என்று எண்ணியிருந்தோம்! ஏன் இப்படி உண்மைக்கு மாறாகப் பேசியுள்ளார் என்பது விளங்கவில்லை !
இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமாக தமிழகத்தில் நடந்த ஆண்டு 1965! அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடக்கிட காவல்துறை ஏவி விடப்பட்டு அதன் விளைவாக பல வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன! அதன் தொடர்ச்சியாக, 1967-ல் தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த பிறகும் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் ஓரளவு கட்டுக்குள் வந்தாலும் முற்றிலுமாக ஓயவில்லை. அன்றைய ஒன்றிய அரசு சந்து பொந்துகளில் புகுந்து இந்தியைத் திணிக்க முயற்சித்ததால் எதிர்ப்பும் இருந்தது. அப்போதுதான இருமொழிக் கொள்கையை, அன்றைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அறிவித்து கொதிப்பை அடக்கினார்! கழக ஆட்சி துவங்கப்படும் வரை தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைதான் இருந்தது!
வரலாற்று நிலை இப்படி இருக்கையில் நிர்மலா சீத்தாராமன் அம்மையார் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இந்திக்கு எதிராகத் தமிழ்நாட்டில் வன்முறை சார்ந்த எதிர்ப்புகள் இருந்ததாகக் கூறியுள்ளார். அம்மையார் இந்த பூவுலகில் ஜனித்ததே 1959 ஆம் ஆண்டு தான்! தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் அம்மையார் குறிப்பிடும் வன்முறை கலந்த எதிர்ப்பு உருவானது 1965ஆம் ஆண்டு! அப்போது அம்மையார் 6 வயது சிறுமிதான்! அவர் கல்லூரியில் படிக்கும் வயதல்ல அது! 1965க்குப் பின் ஒன்றிய அரசு இந்தியைத் திணிக்க முற்படும் நேரங்களில் எதிர்ப்பு தெரிவிக்க அமைதியான வழியில்தான் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. எங்கும் வன்முறை எழுந்ததாக வரலாறு இல்லை ! உண்மை இப்படி இருக்க, நிர்மலா அம்மையார் ஏன் இப்படி பொய் வியாபாரம் செய்யப் புறப்பட்டுள்ளார் என்றே புரியவில்லை !
அம்மையார் கல்லூரி மேற்படிப்பு படித்ததெல்லாம் டில்லியில்தான்! திருமணத்துக்குப் பின் கணவரின் மொழி தெலுங்கை தெளிவாகக் கற்றிட முடிந்த அவரால் டெல்லியில் படித்த காலத்தில் இந்தியை ஆழமாகக் கற்றிட முடியவில்லையா? கற்றிடும் அளவு கூர்மதி படைத்தவர்தான் அவர்; இருந்தும் அந்த நேரத்தில் அவர் தனது எதிர்காலத்துக்கு இந்தியைவிட ஆங்கிலம் உதவிடும் என்ற எண்ணத்தில் அதற்கு அதிக முன்னுரிமை தந்திருக்கலாம்! எதைப் படிப்பது என்பதற்கு தன்னிச்சையாக அவர், அன்று எடுத்த முடிவுக்கு, தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தை காரணம் காட்டி உண்மைக்குப் புறம்பாகப் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகு சேர்க்காது என்பதை உணர்ந்திட வேண்டும்!
உலகத்தின் பல நாடுகளுக்கு அம்மையார் பயணம் மேற்கொண்டு பலவித பொருளாதார, வர்த்தக வணிகத் துறை தொடர்புடைய கருத்த ரங்கங்கள், மாநாடுகளில் பங்கேற்றாரே; அங்கெல்லாம் சென்று இந்தியிலா சங்கோஜத்துடன் உரையாற்றினார்? அவர் படித்தறிந்த ஆங்கிலந்தானே அவருக்குக் கைகொடுத்தது!
இந்தியாவில் பாரதிய ஜனதா அரசு எடுத்த சில முடிவுகளால் சீரழியும் பொருளாதாரம்!
நித்தம் நித்தம் குறைந்துவரும் பணமதிப்பு!
விலைவாசி ஏற்றத்தால் விழி பிதுங்கும் மக்கள்!
வாழ்வுக்கும் சாவுக்குமிடையே போராடும் அடித்தட்டு மக்கள்!
எதிர்காலத்தை இருளில் தொலைத்து விடுவோமோ என்று குமுறிக் கிடக்கும் குறு சிறு தொழிலதிபர்கள்!
தான் நாட்டின் நிதி அமைச்சராக இருக்கும் காலத்தில் இந்தியா இப்படி சீரழிந்து வருகிறதே என்பது குறித்து நடுக்கமோ சங்கோஜமோ கொள்ள வேண்டிய நிதியமைச்சர் இந்தி சரளமாகப் பேச இயலாதது குறித்து சங்கோஜப்படுகிறார்!
இந்தித் திணிப்பு எதிர்ப்பில் தி.மு.க.வின் நிலைப்பாடு குறித்து அப்போதே எங்கள் அரசியல் ஆசான் பேரறிஞர் அண்ணா மிகத் தெளிவாக விளக்கமளித்துள்ளார்! நிர்மலா சீத்தாராமன் அம்மையார் தெளிவு பெற அதனை மீண்டும் வெளியிடுகிறோம். "உங்களுக்கு நான் பணிவன்போடு தெரிவித்துக் கொள்வேன். இது மொழிப் பிரச்சினை அல்ல. இது ஆதிக்கப் பிரச்சினையே தவிர மொழிப் பிரச்சினை அல்ல. நாம் எந்த அளவிற்கு பணியத் தயாராக இருக்கிறோம் என்பதைக் கண்காணிப்பதற்காக; அளவிடுவதற்காக, அரசியல் சூழ்ச்சிக்காரர்கள், ஏகாதிபத்திய வெறி கொண்டவர்கள் தங்களுடைய மொழியைத் திணித்து. இதைத்தான் நீ ஆட்சிமொழியாகக் கொள்ள வேண்டும்; இதிலேதான் பாடங்கள் நடக்கும், இதிலேதான் சட்டங்கள் இயற்றப்படும். இந்த மொழியிலேதான் பாராளுமன்றத்தில் பேசுவார்கள் - இது தெரிந்தால் இங்கெல்லாம் வா.இது தெரியாவிட்டால் இரண்டாந்தர குடிமகனாய் மட்டரக மனிதனாய், ஏனோ தானோவாய், எடுப்பார் கைப்பிள்ளையாய் அடங்கிக் கிட" என்பதுதான் (இந்தித் திணிப்பின்) உட்பொருளாகும்! - அண்ணா அன்று சொன்னார் இன்றைய பாராளுமன்றத்தில் என்ன நடக்கிறது; நாடாளுமன்ற அவைத் தலைவரே இந்தி தவிர தவறியும் ஆங்கிலத்தை உச்சரிப்பதில்லை ; பிரதமர் உட்பட பெரும்பாலான அமைச்சர்களின் பதிலும், பதிலுரைகளும் இந்தியில்தானே அமைந்துள்ளது. இந்தி தெரியாத பல்வேறு மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், வழிதவறி தனித்து விடப்பட்ட ஆட்டுக்குட்டிபோல விழித்துக் கொண்டிருக்கிறார்கள்!இந்த நிலை ஏற்படும் என்பதைத்தான் அண்ணா அன்றே சுட்டிக்காட்டினார்! சொந்த மண்ணிலே நாம் அடிமையாகி விடக்கூடாது என்பதிலே எழுந்த முழக்கம்தான் "ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்!