உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நடைபெற்றுவந்த சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் காலவரையின்றி முடிவடைந்தது.
இந்த நிலையில், உத்தரபிரதேச சட்டசபையில், பாஜக எம்.எல்.ஏ ராகேஷ் கோஸ்வாமி என்பவர் தனது மொபைல் போனில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது. அதேபோல மற்றொரு பாஜக எம்.எல்.ஏ ரவி ஷர்மா புகையிலை சாப்பிடும் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவை எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், "'சபையின் கண்ணியத்தை கெடுக்கும் பாஜக எம்எல்ஏ! மஹோபாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ சபையில் மொபைல் கேம்களை விளையாடுகிறார், ஜான்சியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ புகையிலை சாப்பிடுகிறார். பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு இவர்களிடம் பதில் இல்லை." என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வீடீயோவை சட்டசபைக்குள் இருந்த ஒரு எம்.எல்.ஏ வீடியோ எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் பாஜக எம்.எல்.ஏக்களின் செயலை விமர்சித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் சட்டப்பேரவை தலைவர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சமாஜ்வாதி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.