சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்களின் அடிப்படையில் தென்மாநிலங்கள் பல்வேறு துறையில் பெரும் வளர்ச்சி அடைந்தன. இந்த நிலையில், வடஇந்திய மாநிலங்கள் மற்றும் தென்னிந்திய மாநிலங்களை ஒப்பிட்டு BBC ஆங்கில இதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு தரவுகளின் அடிப்படையில் தென்மாநிலங்கள் எவ்வாறு வடமாநிலங்களை விட முன்னேறியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
BBC கட்டுரையில் சாராம்சம் என்ன?
சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளில் தென்னிந்திய மாநிலங்கள் நாட்டின் மற்ற பகுதிகளை விட தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதாக தரவுகள் காட்டுகின்றன. தென்மாநிலங்களில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது
நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது தென்னிந்தியாவில் குறைந்த குழந்தை இறப்பு விகிதங்களைக் கருத்தில் கொண்டு, தென்னிந்தியாவில் பிறக்கும் தனது குழந்தை தனது வாழ்க்கையின் முதல் வருடத்தில் இறப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கிறது.
அந்த குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது, பிரசவத்தின்போது தாயை இழக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது. மேலும், அந்த குழந்தைக்கு பருவ ஊட்டச்சத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
அந்த குழந்தை தனது ஐந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடவும், நோய்வாய்ப்பட்டால் மருத்துவமனை அல்லது மருத்துவரைக் கண்டுபிடித்து இறுதியில் சிறிது நீண்ட ஆயுளை வாழவும் அதிக வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் தென்மாநிலங்கள் எப்படி முன்னேறியது என்பதற்கான ஒரு சிறந்த உதாரணம். 1982 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 'மதிய உணவுத் திட்டம்' தமிழ்நாட்டில் பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரித்தது. அதன் காரணமாக இன்று நாட்டிலேயே அதிக பள்ளி மாணவர்கள் சேரும் மாநிலமாகவும், படித்தவர்கள் அதிகம் வாழும் மாநிலமாகவும் தமிழ்நாடு உள்ளது.
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் போன்ற அறிஞர்கள், தென்மாநிலங்கள் முன்னேற முக்கிய காரணமாக அரசியல், மாநிலத்தின் ஒருங்கிணைந்த கலாச்சாரம் ஆகியவற்றினை குறிப்பிடுகின்றனர். அரசியல் விஞ்ஞானி பிரேர்னா சிங் போன்றவர்கள், துணைதேசியவாதத்தை , மாநிலத்தின் வலுவான பிராந்திய அடையாளத்தை மற்றொரு சாத்தியமான காரணமாகக் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் தென் மாநிலங்களின் வெற்றி ஒரு சிக்கலுக்கும் வழிவகுத்தது. இந்த நான்கு மாநிலங்களும் தங்கள் வடக்கு சகாக்களை விட சிறிய மக்கள்தொகையைக் கொண்டுள்ளன. தென்மாநிலங்களில் குறைந்த மக்கள் தொகை வளர்ச்சியே நிலவுகிறது.
தென்மாநிலங்களில் செழிப்பு காரணமாக அங்கு அதிகம் வரி விதிக்கப்படுகிறது. அவர்கள் ஒன்றிய அரசுக்கு அதிகம் வரி கொடுத்தாலும் மத்திய ஒதுக்கீட்டில் குறைவான தொகையையே பெறுகிறார்கள். அவர்களின் முந்தைய வெற்றிக்காக தற்போது அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். GST போன்ற சமீபத்திய வரி சீர்திருத்தங்களால் இது மோசமாகிவிட்டது என்று பலர் கூறி வருகின்றனர்.
கடந்த காலங்களில், அனைத்து மாநிலங்களும் மறைமுக வரிகள் மூலம் வருவாயை உயர்த்தி வந்தது. இது அவர்களின் சொந்த கொள்கைகளை உருவாக்கும் நிதி சுதந்திரத்தை வழங்கியது. இதன் காரணமாக தான் வெற்றி பெற்ற மதிய உணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், GST அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், நாட்டை ஒரே சந்தையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் சமீபத்தில் பேசுகையில், "மாநிலங்களில் இருந்து அனைத்து வரிவிதிப்பு மாறுபாடுகளையும் நீக்கிவிட்டு, அவற்றை GST வரியின் கீழ் கொண்டுவந்தால், மாநிலங்கள் தங்கள் வருவாய்க் கொள்கையை எங்கே தீர்மானிக்க வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பினார்.
GST வரிவிதிப்பில் ஒன்றிய அரசின் முடிவால் ஒன்றிய அரசுக்கும், தென் மாநிலங்களுக்கும் இடையேயான உறவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 2020 ஆம் ஆண்டில், ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே நீடித்த அரசியல் போருக்குப் பிறகு, சில மாநில அரசுகள் வழக்குத் தொடரப்போவதாக அச்சுறுத்திய பின்னரே, மாநிலங்களுக்கு சட்டப்பூர்வமாக செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டது. அதன் பின்னர் இந்த ஆண்டின் தொடக்கத்தில், எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பாக மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இது ஒருபுறம் இருக்க, உத்தரபிரதேசத்தில் தமிழ்நாட்டில் ஒரு குடிமகனைப் போலவே நடத்தப்பட வேண்டும் என்று விரும்பும் மக்கள் உள்ளனர். ஆனால் மறுபுறம், GST வரி முறை மூலம் தங்களுக்கு செலவழிப்பதை விட, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு அதிக பணத்தை அனுப்பும் நிலையில் தமிழ்நாட்டின் குடிமக்கள் உள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற தொகுதிகளை மறுநிர்ணயம் செய்யும் முடிவில் ஒன்றிய அரசு உள்ளது. வரும் 2026-ம் ஆண்டில் நாடாளுமன்ற தொகுதி நிர்ணயம் செய்யத் தயாராகும் போது, தெற்கிற்கும் ஒன்றிய அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகள் எதிர்காலத்தில் மேலும் சிக்கலாகிவிடும்.
கடைசியாக நாடாளுமன்ற தொகுதி நிர்ணயம் 1976 இல் செய்யப்பட்டது. தற்போது இது நடந்தால் தென்மாநிலங்கள் பொருள், வருவாய் இழப்பு மற்றும் சொந்தக் கொள்கைகளை உருவாக்குவதற்கான சுதந்திரமின்மை ஆகியவற்றுடன், வளமான தெற்மாநிலங்களுக்கு எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் குறைவான இடங்களும், வடமாநிலங்களுக்கு அதிக தொகுதிகளும் இருக்கலாம்.