மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது மம்தா பானர்ஜீ தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பல அரசியல் முன்னெடுப்புகளை பா.ஜ.க செயல்படுத்திவருகிறது. அதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் பாஜக அணிவகுப்பு நடத்தியது.
இதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பாஜக ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். இதற்காக ஏழு ரயில்களை பாஜக வாடகைக்கு எடுத்தது. இந்த பேரணியின்போது பெரும் கலவரம் வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த போலிஸார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர்.
அப்போது பாஜக தொண்டர்கள் போலிஸார் மீது கற்களை வீசி தாக்கினர். மேலும், காவல் நிலையம் அருகே இருந்த காவல்துறை வாகனம் பாஜகவினரால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுதவிர பாஜகவினரின் தாக்குதலில் ACP டெப்ஜித் சாட்டர்ஜி என்ற அதிகாரியின் கை உடைக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பாஜகவினரால் கடுமையாக தாக்கப்பட்ட டெப்ஜித் சாட்டர்ஜியின் உயிரைக் காப்பாற்றிய முகம்மது ஷாஹித் என்ற இளைஞருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பேசியுள்ள முகம்மது ஷாஹித், பேரணியின்போது பாஜகவினர் காவல்துறையினரை அடிக்கத் தொடங்கினர், அவர்களிடம் தனியாக சிக்கிய ACP டெப்ஜித் சாட்டர்ஜியை சில போராட்டக்காரர்கள் இரக்கமின்றி தாக்கினர். ஒருகட்டத்தில்,ஏ.சி.பி போராட்டக்காரர்களின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டதும் நான், அந்த கும்பலிடமிருந்து அவரை இழுத்துச் எனது கடைக்கு பின்னால் மசூதிக்கு அழைத்துச் சென்றேன். மற்ற கடைக்காரர்கள் அவருக்கு உதவினார்கள். நாங்கள் அவரின் காலிலிருந்து கண்ணாடி துண்டுகளை எடுத்தோம்" என்று கூறியுள்ளார்.